மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு 104ஐ அழைக்கலாம்
மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு 104ஐ அழைக்கலாம்
ADDED : நவ 21, 2025 11:35 PM
சென்னை: 'மக்களை தேடி மருத்துவம் திட்டத்துக்கு, நகர்ப்புற மக்கள், 104 மருத்துவ சேவையை அழைப்பதன் வாயிலாக, இச்சேவையை பெற முடியும்' என, பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டம், 2021ல் துவக்கப்பட்டு, பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று, மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன. இதுவரை, 2.50 கோடி இணை நோயாளிகள் பயனடைந்து வருகின்றனர். அவர்களுக்கு, மாதந்தோறும் மருந்துகள், டயாலிசிஸ், இயன்முறை சிகிச்சைகள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
கிராமப்புற மக்கள் அதிகம் பயன்படுத்தினாலும், நகர்ப்புறங்களில் அதிகளவில் பயன்படுத்தப்படவில்லை. எனவே, தன்னார்வ அமைப்புகள், சமூக நல அமைப்புகளின் உதவியை, பொது சுகாதாரத் துறை நாடியுள்ளது.
இது குறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குநர் சோமசுந்தரம் கூறியதாவது:
சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பெருநகரங்களில் வசிப்போர், தனியார் மருத்துவ சேவைகளை, தங்களுக்கு போதுமானதாக கருதுகின்றனர். இதனால், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் செயல்பாடுகள், நகர்ப்புறத்தில் பெரிய அளவில் இல்லை.
தற்போது, குடியிருப்போர் நல சங்கத்தினரின் ஒத்துழைப்புடன், மக்கள் நல்வாழ்வுத் துறை, அவர்களிடமும் இத்திட்டத்தை எடுத்து செல்ல முயற்சித்து வருகிறது.
குடியிருப்பு வாசிகளை ஒருங்கிணைத்து, 104 என்ற மக்கள் நல்வாழ்வுத் துறை எண்ணை தொடர்பு கொண்டால், அப்பகுதிக்கு மருத்துவக் குழுவினர் சென்று, தேவையான சிகிச்சைகளை மாதந்தோறும் இலவசமாக வழங்குவர்.
இவ்வாறு அவர் கூறினார்.

