UPDATED : ஜூன் 21, 2025 09:28 AM
ADDED : ஜூன் 20, 2025 11:39 PM

சென்னை : டாஸ்மாக் முறைகேடு தொடர்பான விசாரணையில், அமலாக்கத் துறைக்கு திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனை விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அத்துடன், மனுதாரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் போன் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் திரும்ப ஒப்படைக்கும்படியும் அமலாக்கத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
டாஸ்மாக் மதுபான கொள்முதல் முறைகேடு தொடர்பாக, மே 16ல், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். பின், விக்ரம் ரவீந்திரனின் வீடு, அலுவலகத்துக்கு, 'சீல்' வைத்தனர்.
அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிராக, ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
மனுக்களில், 'அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்குப் பின், தங்களிடம் இருந்து பறிமுதல் செய்த, 'ஹார்டுடிஸ்க்' உள்ளிட்ட பொருட்களை திரும்ப வழங்க வேண்டும். அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும். அலுவலகம், வீடுகளுக்கு வைக்கப்பட்ட, 'சீல்' அகற்றப்பட வேண்டும்' என்று கோரிஇருந்தனர்.
இந்த மனுக்களை, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வு விசாரித்தது. விக்ரம் ரவீந்திரன் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கிரி, அபுடுகுமார்; ஆகாஷ் பாஸ்கரன் சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், வழக்கறிஞர் கே.எம்.காளிசரண் ஆகியோர் ஆஜராகினர்.
விசாரணையின்போது, டாஸ்மாக் விவகாரத்தில் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரனுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்யும்படி, அமலாக்கத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
அதன்படி, ஆவணங்களை அமலாக்கத்துறை தாக்கல் செய்தது. அதை பார்வையிட்ட நீதிபதிகள், 'சோதனையின் முடிவில் ஒரு சொத்தை சீல் வைக்க, அமலாக்கத் துறைக்கு எந்த சட்ட விதி அனுமதித்தது?' என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு, 'பி.எம்.எல்.ஏ., என்ற சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டப்பிரிவு 17-ன்படி, சொத்துக்களுக்கு சீல் வைக்க அதிகாரம் இல்லை' என்று அமலாக்கத் துறை பதிலளித்தது.
மேலும், அனுமதியின்றி வீட்டினுள் நுழைய வேண்டாம் என ஒட்டப்பட்ட நோட்டீசை திரும்ப பெறுவதாகவும், பறிமுதல் செய்த மின்னணு சாதனங்கள் உட்பட அனைத்தையும் மனுதாரர்களிடம் திரும்ப ஒப்படைக்க தயாராக உள்ளதாகவும் கூறியது.
இந்த வழக்கில் நேற்று, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர்களுக்குஎதிராக, அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனை முற்றிலும் அதிகார வரம்பிற்கு உட்பட்டது அல்ல.
ஏனெனில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில், மனுதாரர்கள் பண மோசடி குற்றத்தில் ஈடுபட்டிருக்கலாம் என நம்புவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை.
மனுதாரர்களுக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில், வீடுகள் மற்றும் அலுவலகங்களில், அமலாக்கத் துறை சோதனை நடத்தவும், பறிமுதல் செய்யவும் எந்த அதிகாரமும் இல்லை.
எனவே, மனுதாரர்களுக்கு எதிரான அமலாக்கத்துறையின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.
மே 16ல் நடத்தப்பட்ட சோதனையை தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை, அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். பிரதான வழக்கின் விசாரணை, ஜூலை 16க்கு தள்ளிவைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, அமலாக்கத்துறைக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.