சூழ்ச்சிகளால் சேதுசமுத்திர திட்டம் முடக்கம்: ஸ்டாலின்
சூழ்ச்சிகளால் சேதுசமுத்திர திட்டம் முடக்கம்: ஸ்டாலின்
ADDED : ஜன 24, 2024 12:12 AM

சென்னை:''அரசியல் சூழ்ச்சி காரணமாக சேதுசமுத்திர திட்டம் முடக்கப்பட்டது,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
தி.மு.க., பொருளாளர் டி.ஆர்.பாலு எழுதியுள்ள 'பாதை மாறாப் பயணம்' என்ற நுாலின் மூன்றாவது பாகம் வெளியீட்டு விழா, சென்னை அறிவாலயத்தில் நேற்று நடந்தது.
நுாலை வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
சேது சமுத்திர திட்டம் அண்ணாதுரையின் கனவு திட்டம். கருணாநிதி வற்புறுத்தலால், 2004ல் இந்த திட்டம் துவங்கப்பட்டது.
அடுத்தடுத்து வந்த அரசியல்வாதிகளின் சூழ்ச்சி காரணமாக இத்திட்டம் முடக்கப்பட்டது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு இருந்தால், இந்திய வளர்ச்சிக்கும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும் மிக முக்கியமானதாக அமைந்திருக்கும்.
இலங்கையில் நடந்த இனப்படுகொலை மற்றும் மனித உரிமை குற்றச்சாட்டுகளுக்கு ஆளான இலங்கை அரசு மீது விசாரணை நடத்த வலியுறுத்தி, ஐ.நா., சபையிடம் கோரிக்கை மனு அளிக்க, என்னையும், டி.ஆர்.பாலுவையும்தான் கருணாநிதி அனுப்பி வைத்தார்.
அங்கு நாங்கள் சென்று, இலங்கை தமிழர்களுக்காக வாதிட்டோம். இது தொடர்பாக, இந்த நுாலில் விளக்கமாக டி.ஆர்.பாலு எழுதியுள்ளார்.
கட்சியில் என்னையும், டி.ஆர்.பாலுவையும் பிரித்து வரலாறு எழுத முடியாது. நெருக்கடி காலத்திற்குமுன், தி.மு.க., இளைஞரணியை கோபாலபுரத்தில் துவக்கியபோது, டி.ஆர்.பாலு உறுதுணையாக இருந்தார்.
பேரிடர் காலத்திற்கு நிதி ஒதுக்காமல், பா.ஜ., தலைமை இறுதிக் காலத்தில் கோவில் கட்டி, மக்களை திசைதிருப்பப் பார்க்கிறது. மக்களிடம் சொல்ல சாதனைகள் எதுவும் இல்லை.
இண்டியா கூட்டணி கட்சிகள் கூட்டம் மாநில வாரியாக நடத்தி வருகிறது. விரைவில் நல்லபடியாக முடிந்து, நாட்டு மக்களை காப்பாற்றும் மத்திய அரசை உருவாக்க, தேர்தல் களத்தில் நுழைகிறோம். அதற்கும் டி.ஆர்.பாலு தயாராக இருக்க வேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

