ஏர்போர்ட் அமைப்பது தெர்மோகோல் விடுவது போல் 'ஈசி' கிடையாது: ராஜா செல்லுார் ராஜுக்கு அமைச்சர் பதில்
ஏர்போர்ட் அமைப்பது தெர்மோகோல் விடுவது போல் 'ஈசி' கிடையாது: ராஜா செல்லுார் ராஜுக்கு அமைச்சர் பதில்
ADDED : மார் 19, 2025 12:06 AM

சென்னை:''ஓசூர் விமான நிலையம் குறித்து, விரைவில் நல்ல செய்தி வரும். பிரமாண்டமான விமான நிலையம் நிச்சயமாக அங்கு அமைக்கப்படும்,'' என, தொழில் துறை அமைச்சர் ராஜா கூறினார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - செல்லுார் ராஜு: ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என, பட்ஜெட்டில் கூறப்பட்டு உள்ளது. ஆட்சி முடிவதற்கு ஓராண்டு தான் உள்ளது. அதற்குள் எப்படி விமான நிலையம் அமைக்க முடியும்?
அமைச்சர் ராஜா: தமிழக மக்கள் என்றென்றும் தி.மு.க., ஆட்சி இருக்க வேண்டும் என்ற நிலையான முடிவை எடுத்து விட்டனர். இனி யார் சொல்வதும் எடுபடாது.
கோவை மக்கள் முழுக்க முழுக்க உங்கள் பக்கம் நின்றனர். அவர்களுக்கு எந்த திட்டத்தையும் நீங்கள் செயல்படுத்தவில்லை.
எங்களது ஆட்சியில் கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு, இப்போது பணிகள் துவங்கி விட்டன. அதேபோல, நிச்சயம் தரமான விமான நிலையம் ராமேஸ்வரத்தில் அமைக்கப்படும்.
அமைச்சர் தங்கம் தென்னரசு: செல்லுார் ராஜு, மதுரைக்கு விமானத்தில் சென்று விடுவார். ராமநாதபுரம் மக்களும் விமானத்தில் சென்று இறங்க வேண்டாமா; அதற்கான பணிகளை துவங்கி இருக்கிறோம்.
விமான நிலையம் அமைப்பது உங்களை போல, 'ஜீ பூம்பா' வேலை கிடையாது; மாந்தரிக வேலையும் கிடையாது. அடிப்படையான கட்டமைப்பை உருவாக்க வேண்டும். உரிய காலத்தில் படிப்படியாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு, திட்டம் நிறைவேற்றப்படும்.
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: நாங்கள் கோவைக்கு ஒன்றுமே செய்யவில்லை என்பது தவறான கருத்து. எங்களது ஆட்சியில் தான், கோவை விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்தி தரப்பட்டது. அதனால், பாதிக்கப்பட்ட, 500 பேருக்கு வீடுகள் வழங்கப்பட்டன.
அமைச்சர் ராஜா: உண்மைக்கு புறம்பான தகவல்களை சொல்கிறார். தி.மு.க., ஆட்சியில் தான் துாத்துக்குடி, மதுரை, கோவை விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்தி தரப்பட்டது. இதுகுறித்த முழு விபரத்தை, தொழில்துறை மானிய கோரிக்கையில் தெரிவிக்கிறேன்.
செல்லுார் ராஜு: கடந்த 2024ம் ஆண்டு 110 விதியின் கீழ், ஓசூரில் 2,000 ஏக்கர் பரப்பளவில், சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதுவரை எந்த பணியையும் துவங்கவில்லை. பூமி பூஜையும் போடவில்லை.
அமைச்சர் ராஜா: ஓசூரில் விமான நிலையம் அமைப்பது, 'தெர்மோகோல்' விடுவது போல ஈசியான வேலை கிடையாது. நில எடுப்பு பணியை முதலில் மேற்கொள்ள வேண்டும். இதற்கான ஐந்து இடங்களை தேர்வு செய்தோம்.
அதில் இரண்டு இடங்களை, முதல்வர் தேர்வு செய்தார். அது மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஓசூர் விமான நிலையம் குறித்து விரைவில் நல்ல செய்தி வரும். பிரமாண்டமான விமான நிலையம் நிச்சயமாக அங்கு அமைக்கப்படும்.
செல்லுார் ராஜூ: தெர்மோகோல், தெர்மோகோல் என இப்படி ஓட்டுறீங்களே... அதிகாரிகள் சொல்லித்தானே நீங்களும் எல்லாம் செய்கிறீர்கள். அதேபோல, அதிகாரிகள் சொல்லித்தான் நானும் அங்கு போனேன். ஏன் இப்படி ஓட்டுகிறீர்கள்?
இவ்வாறு விவாதம் நடந்தது.