அக்னி தீர்த்தத்தில் கழிவுநீர்: கமிஷனர் ஆஜராக உத்தரவு
அக்னி தீர்த்தத்தில் கழிவுநீர்: கமிஷனர் ஆஜராக உத்தரவு
ADDED : நவ 27, 2024 10:36 PM
மதுரை:ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க தாக்கலான வழக்கில், ராமேஸ்வரம் நகராட்சி கமிஷனர் ஆஜராக, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று உத்தரவிட்டது.
சென்னை வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த பொதுநல மனு:
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் அக்னி தீர்த்தக் கடலில் கழிவுநீர் கலக்கிறது. இதை தடுக்க கலெக்டர், நகராட்சி கமிஷனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கடந்த 18ல் நடந்த விசாரணையின்போது ராமேஸ்வரம் நகராட்சி தரப்பு கூறியதாவது:
அக்னி தீர்த்தத்திலிருந்து, 500 மீட்டருக்கு அப்பால், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. சுத்திகரிக்கப்படும் நீரை, கடலில் கலக்க விட மாட்டோம்.
இவ்வாறு நகராட்சி தெரிவித்தது.
நகராட்சி கமிஷனர் இதை, பிரமாண பத்திரமாக, 27ம் தேதி தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து நேற்று, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு முன் வழக்கு விசாரணைக்கு வந்தது.
நகராட்சி தரப்பில், பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் தேவை என தெரிவிக்கப்பட்டது.
நீதிபதிகள், 'ராமேஸ்வரம் நகராட்சி கமிஷனர், டிச., 2ல் ஆஜராக வேண்டும். தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டனர்.