மாணவிக்கு பாலியல் தொந்தரவு; நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியர் உட்பட மூன்று பேர் கைது
மாணவிக்கு பாலியல் தொந்தரவு; நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியர் உட்பட மூன்று பேர் கைது
ADDED : பிப் 14, 2025 10:52 AM

ஆத்தூர்: அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, தகவல் அறிந்தும் உரிய நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் 14 வயது மாணவியை, அதே பள்ளியில் படிக்கும், 16 வயதுடைய பிளஸ் 1 மாணவர்கள் மூன்று பேர் பாலியல் தொந்தரவு செய்தனர்.
இது தொடர்பாக மாணவியின் பெற்றோர், குழந்தைகள் உதவி மையத்துக்கு அளித்த புகாரின்படி ஆத்தூர் அனைத்து மகளிர் போலீசார் மூன்று மாணவர்களை கைது செய்தனர். போக்சோ வழக்கு பதிவு செய்து அவர்களை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.
பாலியல் தொந்தரவு குறித்து மாணவ, மாணவியரின் வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் ஆகியோருக்கு தகவல் தெரிந்தும் போலீசில் புகார் அளிக்காததால், தலைமை ஆசிரியர் முத்துராமன் ஆசிரியர்கள் ராஜேந்திரன், பானுப்பிரியா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை ஆத்தூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.