ஷாஹ்தாராவில் அபாய கட்டடங்களுக்கு 'சீல்' விரைவில் இடிக்கப்படும் என மாநகராட்சி அறிவிப்பு
ஷாஹ்தாராவில் அபாய கட்டடங்களுக்கு 'சீல்' விரைவில் இடிக்கப்படும் என மாநகராட்சி அறிவிப்பு
ADDED : மே 16, 2025 08:37 PM
புதுடில்லி:கிழக்கு டில்லியின் ஷாஹ்தாரா பிஹாரி காலனியில் சரியும் நிலையில் உள்ள சிதிலம் அடைந்த நான்கு மாடி கட்டிடத்தில் வசிப்போரை காலி செய்ய 'நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது. மேலும், பழமையான பல கட்டடங்களுக்கு மாநகராட்சி 'சீல்' வைத்துள்ளது.
இதுகுறித்து, டில்லி மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் சந்தீப் கபூர் கூறியதாவது:
கிழக்கு டில்லி ஷாஹ்தாரா பிஹாரி காலனியில் பல கட்டடங்கள் சிதிலம் அடைந்துள்ளன. உள்ளூர் போலீஸ் உதவியுடன் சில கட்டடங்களில் வசிப்போரை அப்புறப்படுத்தி, கட்டடம் சரியாமல் இருக்க 'ஜாக்கி'கள் பொருத்தப்பட்டுள்ளன. அந்தக் கட்டடங்கள் விரைவில் இடிக்கப்படும்.
இந்தப் பகுதியில் ஐந்து முதல் ஆறு மாடி கட்டடங்களில் ஆய்வு நடத்தி காலி செய்ய 'நோட்டீஸ்' வழங்கி வருகிறோம். பழமையான பல கட்டடங்கள் சரியும் நிலையில் இருக்கின்றன. அவை இடிந்து விழுந்தால் உயிர்ப்பலி ஏற்படும்.
இந்தக் கட்டிடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, 'சீல்' வைக்கப்படுகின்றன.
பிஹாரி காலனி முழுதும் கட்டடங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. மிகவும் சிதிலம் அடைந்த கட்டடங்களை இடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆய்வுப் பணியில் பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். .
ஒரு கட்டடம் ஆபத்தானது என அடையாளம் காணப்பட்டால், அதைச் சுற்றியுள்ள கட்டடங்களும் ஆய்வு செய்யப்படும்/
ஒன்று இடிந்தால் அருகிலுள்ள கட்டடங்களுக்கும் சேதம் ஏற்படும். எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் உள்ள கட்டடத்தில் வசிப்போரும் வெளியேற்றப்படுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பார்ஷ் பஜார் போலீசார் இந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.