அன்புமணியுடன் சண்முகம் சந்திப்பு பா.ம.க., ஒன்றுபட வலியுறுத்தல்
அன்புமணியுடன் சண்முகம் சந்திப்பு பா.ம.க., ஒன்றுபட வலியுறுத்தல்
ADDED : அக் 04, 2025 06:40 AM

சென்னை : பா.ம.க.. தலைவர் அன்புமணியை, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம் சந்தித்துப் பேசினார்.
சென்னை அக்கரையில் உள்ள அன்புமணி வீட்டிற்கு நேற்று வந்த சண்முகம், தன் அண்ணன் மகன் திருமண அழைப்பிதழை வழங்கினார்.
ஏற்கனவே, அழைப்பிதழ் கொடுப்பதற்காக, கடந்த செப்டம்பர் 29ம் தேதி, பா.ம.க., நிறுவனர் ராமதாசை, சண்முகம் சந்தித்தார். அப்போது, நடப்பு அரசியல் சூழல் குறித்து இருவரும் பேசினர். அப்போது அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை சந்திக்க வேண்டும் என்ற, தன் விருப்பத்தை, ராமதாஸ் தெரிவித்தார்.
இந்நிலையில், நேற்று அன்புமணியையும் சந்தித்து, சண்முகம் அழைப்பிதழ் கொடுத்துள்ளார். இருவரும் தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியுள்ளனர். கரூர் சம்பவத்தால் தமிழக அரசியலில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறித்தும் விவாதித்துள்ளனர்.
அப்போது, 'பா.ம.க., பிளவுபடாமல் ஒரே கட்சியாக இருந்தால் தான் பலம். இல்லையெனில், ஓட்டு வங்கி சிதைந்து விடும். ஒன்றுபட்ட பா.ம.க.,வுடன் கூட்டணி அமைப்பதே அ.தி.மு.க.,வின் விருப்பம். இதை ராமதாசிடமும் தெரிவித்துள்ளேன். இருவரும் மன ரீதியில் இறங்கி வந்தால், அது சாத்தியம்' என, சண்முகம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அ.தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
ராமதாஸ், அன்புமணி இருவருமே, அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணியில் சேரவே விரும்புகின்றனர். ஆனால், தனித்தனி கட்சி போல செயல்பட்டு வருவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ராமதாஸ், அ.தி.மு.க., பக்கம் சென்றால், அன்புமணியோ விஜய் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் முடிவில் இருந்தார்.
கரூர் சம்பவத்திற்கு பின் நிலைமை மாறியுள்ளது. கடந்த 29ம் தேதி ராமதாசை சந்தித்தபோது, ஒன்றுபட்ட பா.ம.க.,வுடன் கூட்டணி வை க்கவே, அ.தி.மு.க., தலைமையும், தொண்டர்களும் விரும்புகின்றனர் என்பதை, சண்முகம் தெரிவித்திருந்தார். தானும் அதையே விரும்புவதாகவும், இதற்காக அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை சந்திக்க விரும்புவதாகவும் ராமதாஸ் தெரிவித்தார்.
தற்போது, அன்புமணியிடமும், சண்முகம் இதையே வலியுறுத்தி இருக்கிறார். பா.ம.க., இரண்டாக பிளவுபட்டால், நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகம் இழந்து, தேர்தலில் வேலை செய்ய மாட்டார்கள். இதனால் பா.ம.க.,வுக்கும் பலனில்லை; கூட்டணிக்கும் வெற்றி கிடைக்காது.
இதை ராமதாஸ், அன்புமணி இருவரிடமும் சண்முகம் தெளிவுபடுத்தியுள்ளார். இனி, முடிவெடுக்க வேண்டியது ராமதாசும், அன்புமணியும் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.