உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அபராதம் செலுத்திய சண்முகம்
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அபராதம் செலுத்திய சண்முகம்
ADDED : ஆக 15, 2025 01:06 AM
சென்னை:அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.பி.,யுமான சி.வி.சண்முகம் செலுத்திய, 10 லட்சம் ரூபாய் அபராதத் தொகையை, கல்வராயன் மலைவாழ் மக்களின் சுகாதார நலத்திட்டங்களுக்கு பயன்படுத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பெயரை பயன்படுத்த, அனுமதி அளிக்கக்கூடாது என, சி.வி.சண்முகம், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை பெற்றார்.
இது தொடர்பான, மேல் முறையீட்டு வழக்கில், உச்ச நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்ததுடன், அவருக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.
'அபராதத் தொகையை, தமிழக அரசுக்கு செலுத்த வேண்டும். அதை விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு, திட்டங்களை செயல்படுத்த பயன்படுத்த வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்திருந்தனர்.
அதன்படி, அபராதத் தொகையை, சி.வி.சண்முகம், நேற்று தமிழக அரசுக்கு செலுத்தினார். அத்தொகையை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கல்வராயன் மலை வட்டாரத்தில் வசிக்கும், மலைவாழ் மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும், சுகாதார நலத்திட்டங்களுக்கும், அங்கு நடக்கும் நலன் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கும் பயன்படுத்த, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.