UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 07:34 PM
ராணிப்பேட்டை: ஆற்காட்டில், ஆடு மேய்க்கும் தொழிலில் கொத்தடிமையாக ஈடுபடுத்தப்பட்ட மூவர் மீட்கப்பட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த புது மாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் பாபு, 50. ஆடுகள் வளர்த்து வருகிறார். இவர், கலவை பகுதியை சேர்ந்த முத்து, 23, அவரது மனைவி ஜோதி, 21, மற்றும் செய்யாறு பகுதியை சேர்ந்த குமார், 50, ஆகிய மூவரையும் ஆண்டுக்கு 20,000 ரூபாய் தருவதாக கூறி வேலையில் அமர்த்தியுள்ளார்.
இந்நிலையில், 6 மாதங்களாக இருளர் சமூகத்தை சேர்ந்த மூவரும் கொத்தடிமைகளாக ஆடு மேய்த்து வந்தனர். இது தொடர்பாக, ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
ராணிப்பேட்டை கோட்டாட்சியர் ராஜி உள்ளிட்ட அதிகாரிகள், புது மாங்காடு பகுதியில் நேற்று விசாரித்தனர். அப்போது, அங்கு ஆடு மேய்த்து கொண்டிருந்த குமார், முத்து, ஜோதி மற்றும் அவரது 1 வயது கைக்குழந்தை ஆகியோரை அதிகாரிகள் மீட்டு, ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.
தொழிலாளர் துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு, நான்கு பேரும் பாதுகாப்பாக அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனிடையே, ஆட்டுப்பண்ணை உரிமையாளர் பாபுவிடம் ஆற்காடு தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
