ADDED : பிப் 05, 2025 10:38 PM
மதுரை; கார் மோதி ஆடுகள் பலியானதற்கு இழப்பீடு கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.துாத்துக்குடி மாவட்டம் சூரங்குடி முனியசாமி தாக்கல் செய்த மனு: எனக்கு சொந்தமாக 200 ஆடுகள் இருந்தன. அருப்புக்கோட்டை-சாயல்குடி மெயின்ரோடு தொப்பலாக்கரை விலக்கு விவசாய பண்ணை அருகே ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தேன். அடையாளம் தெரியாத கார் மோதியதில் 30 ஆடுகள் இறந்தன. கார் டிரைவர் மீது வழக்கு பதியப்பட்டது. இழப்பீடு கோரி கால்நடைத்துறை இயக்குனர், விருதுநகர் கலெக்டர், எஸ்.பி.,பரளச்சி போலீசாருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி ஜி.கே.இளந்திரையன்: ஆடுகளை நான்குவழிச்சாலை வழியாக ஓட்டிச் சென்றதை மனுதாரர் ஒப்புக்கொண்டார். நான்கு வழிச்சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால், ஒட்டியுள்ள பகுதியில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுமதித்தால், விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பது அவருக்கு தெரியும். மனுதாரரின் கவனக்குறைவால்தான் விபத்து ஏற்பட்டு ஆடுகள் இறந்துள்ளன. அரசிடமிருந்து இழப்பீடு பெற மனுதாரருக்கு உரிமை இல்லை. மனு தகுதியற்றது. தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.