'முருக பக்தர்கள் மாநாடு சிறப்பாக நடக்காமல் இருக்க சேகர்பாபு விரதம்'
'முருக பக்தர்கள் மாநாடு சிறப்பாக நடக்காமல் இருக்க சேகர்பாபு விரதம்'
ADDED : ஜூன் 18, 2025 01:27 AM

தஞ்சாவூர்: “முருக பக்தர்கள் மாநாடு சிறப்பாக நடைபெறக்கூடாது என, அமைச்சர் சேகர்பாபு, விரதம் இருப்பது ரொம்பவும் சந்தோஷமாக உள்ளது,” என, ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மிரட்டல்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் நேற்று அளித்த பேட்டி:
மதுரை, முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வரும், பாத யாத்திரை குழுக்களையும், விளம்பர வாகனத்தையும் போலீசார் தடுக்கின்றனர். தொடர்ந்து செல்லக்கூடாது என மிரட்டுகின்றனர்.
தமிழக அரசு சார்பில், முருகனுக்கு பழனியில் மாநாடு நடத்தினர். அது முழுக்க முழுக்க அரசியல் மாநாடாக நடத்தப்பட்டது. ஆனால், மதுரையில் நாங்கள் நடத்தவிருக்கும் மாநாடு, அரசியல் சார்பற்ற ஆன்மிக மாநாடு.
மாநாட்டிற்கு அனைவரையும் போல முதல்வரும் வரவேண்டும். அதற்காக, முதல்வருக்கும் அழைப்பிதழ் கொடுக்க விரும்பினோம்.
நேரம் கேட்டிருக்கிறோம். அனுமதி கிடைத்தால், அவரையும் நேரில் அழைப்போம்.
முருக பக்தர்கள் மாநாடு சிறப்பாக நடைபெற, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் இருவரும் விரதம் இருந்து மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
ஆனால், முருக பக்தர்கள் மாநாடு சிறப்பாக நடைபெறக்கூடாது என அமைச்சர் சேகர்பாபு, அதே முருகக் கடவுளிடம் வேண்டி விரதம் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அது ரொம்பவும் சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளது.
அழைப்பிதழ்
தி.மு.க., அதன் கூட்டணியில் உள்ளவர்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள். இருந்தாலும், அவர்களும் மாநாட்டுக்கு வர வேண்டும் என்பதற்காகவே, அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு ஆகியோருக்கு அழைப்பிதழ் கொடுத்துஇருக்கிறோம்.
மதுரை முருக பக்தர்கள் மாநாடு, ஹிந்துக்களை ஒருமைப்படுத்தும். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களின் செயல்பாட்டை கட்டுப்படுத்தக்கூடிய மாநாடாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.