கீழப்பார்த்திபனுாரில் மண்ணில் புதைந்த கி.பி.,13ம் நுாற்றாண்டு சிவன் கோயில்
கீழப்பார்த்திபனுாரில் மண்ணில் புதைந்த கி.பி.,13ம் நுாற்றாண்டு சிவன் கோயில்
ADDED : பிப் 20, 2025 04:15 AM

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கீழ பார்த்திபனுாரில் மண்ணில் புதைந்த கி.பி.,13ம் நுாற்றாண்டைச் சேர்ந்த சிவன் கோயில் குறித்து ஆவணப்படுத்தும் பணி துவக்கப்பட்டுள்ளது.
கீழப்பார்த்திபனுாரில் கி.பி.,13 அல்லது 14ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படும் பட்டீஸ்வரமுடைய அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் ஒரு கால பூஜை திட்டத்தில் வருகிறது.
கோயிலின் கோபுரங்கள் சிதைந்த நிலையில் 6 அடி வரை கோயில் சுற்றுப்பகுதி தெரியாத வகையில் மண்ணில் புதைந்துள்ளது. மேலும் கோயிலையொட்டி கண்மாய் கரை உயர்த்தப்பட்டு ரோடு அமைக்கப்பட்டுள்ளது.இதனை புனரமைக்கும் வகையில் 2022 மே மாதம் சீரமைப்பு பணிக்காக ஆய்வு நடத்தப்பட்டது.
தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு பின் தற்போது தொல்லியல் துறை சார்பில் புதைந்த கோயிலின் பகுதிகளை மண் அள்ளும் இயந்திரம் மூலம் தோண்டி எடுக்கின்றனர்.
மேலும் ஒவ்வொரு கல்லுக்கும் எண்கள் எழுதப்பட்டு அவற்றை ஆவணப்படுத்தி கோயிலை உயர்த்தி கட்ட உபயதாரர்கள் மூலம் பணிகள் நடப்பதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல் கள்ளிக்கோட்டை சிவன் கோயில் உள்ளிட்ட சிதைந்த அனைத்து கோயில்களையும் புனரமைக்க வேண்டும் என ஆன்மிக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

