சொத்து வரி நிலுவைத்தொகை அபராதத்துடன் வசூலிப்பால் 'ஷாக்'
சொத்து வரி நிலுவைத்தொகை அபராதத்துடன் வசூலிப்பால் 'ஷாக்'
ADDED : நவ 13, 2024 04:27 AM

விருதுநகர் ; தமிழகத்தில் பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்பட்ட நிலையில், நிலுவைத்தொகை ஒரு சதவீதம் அபராதத்தோடு வசூலிக்கப்படுவது, பொதுமக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில், 488 பேரூராட்சிகள் உள்ளன. இந்த ஆண்டு மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு சொத்து வரி உயர்த்தி அறிவிக்கப்பட்டது. கடந்த செப்டம்பரில், பேரூராட்சிகளிலும் சொத்து வரி, ஆறு சதவீதம் உயர்த்தப்பட்டது.
முதல் அரையாண்டுக்கான தொகையை செப்டம்பர் மாதத்திற்குள்ளும், இரண்டாம் அரையாண்டு தொகையை, மார்ச் மாதத்திற்குள்ளும் செலுத்த வேண்டும். இல்லையெனில், ஒரு சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, அக்டோபர், நவம்பர் மாதங்களில், முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை உயர்த்திய தொகை, ஒரு சதவீத அபராதத்துடன் வசூலிக்கப்படுகிறது. இதனால், பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும், ஏழை மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
தமிழகத்தில் வளர்ச்சி காணாத, பல பேரூராட்சிகள் உள்ளன. தொழில், வாழ்வாதாரத்திற்கு, அங்குள்ள மக்கள் நகராட்சி, மாநகராட்சி பகுதிகளை தேடி வருகின்றனர். இந்நிலையில் வீட்டின் சொத்து வரி உயர்வுடன் அபராதம் விதிப்பது, மேலும் சுமையை தந்துள்ளது. எனவே, சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.