4 மாவட்டங்களில் நடந்த சோதனையில் அதிர்ச்சி; 70,849 பேருக்கு புற்றுநோய் ஆரம்ப அறிகுறி
4 மாவட்டங்களில் நடந்த சோதனையில் அதிர்ச்சி; 70,849 பேருக்கு புற்றுநோய் ஆரம்ப அறிகுறி
ADDED : மே 17, 2025 01:54 AM

தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில், 10.18 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட புற்றுநோய் பரிசோதனையில், 361 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆரம்ப நிலை அறிகுறி பாதிப்புடன், 70,849 பேர் இருப்பது தெரிய வந்துள்ளது.
சுற்றுச்சூழல் மாசு, உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் போன்றவற்றால், தொற்றா நோயான புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் புற்றுநோய் பாதிப்பை, ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை அளிக்க, புற்றுநோய் பரிசோதனை திட்டத்தை, 2023ல் மாநில அரசு துவக்கியது.
கடந்த ஓராண்டில், ஈரோடு, திருப்பத்துார், கன்னியாகுமரி, ராணிப்பேட்டை மாவட்டங்களில், 18 வயதை கடந்த ஆண், பெண் இருபாலருக்கும், புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட்டது.
இதுவரை, 10.18 லட்சம் பேருக்கு புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களில், 361 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பரிசோதனை முடிவில், புற்றுநோய் துவக்க நிலை அறிகுறிகளுடன், 70,849 பேர் இருப்பதும் தெரிய வந்துள்ளது. அவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு வராமல் தற்காத்துக் கொள்ள, உரிய அறிவுரை மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன.
பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது:
புற்றுநோய் பாதிப்பை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை அளித்தால், நோயாளியை குணப்படுத்த முடியும்.
எனவே, 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு வாய் புற்றுநோய்; 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு கருப்பை மற்றும் மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்யப்படுகிறது. இப்பரிசோதனையை, அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
பலர் புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியாமலே உள்ளனர். அவர்களை கண்டறிந்து, தீவிர பாதிப்பு ஏற்படாமல் தடுக்க, இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திற்குள், ஒரு கோடி பேருக்காவது புற்றுநோய் பரிசோதனை செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆரம்பத்தில் கண்டறிந்தால் குணப்படுத்த முடியும்
உடலில் மரு அல்லது மச்சம் திடீரென பெரிதாக வளருதல்; குரல் மாற்றம், குறிப்பாக ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு கட்டுப்படாத நீண்ட கால குரல் மாற்றம்; பெண்களுக்கு நீண்ட நாள் உதிரப்போக்கு; மார்பகங்களில் நீர், ரத்தம் போன்ற திரவம் வடிதல் உள்ளிட்டவை, ஆரம்பகால புற்றுநோய் அறிகுறிகள்.
இவை, புற்றுநோயாக பல ஆண்டுகள் ஆகலாம். ஆரம்ப நிலையில் கண்டறிந்து உரிய சிகிச்சை பெற்றால், புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்த முடியும்.
இரண்டாம் நிலை, மூன்றாம் நிலையில் கண்டறியப்பட்டால், வாழ்நாளில், 10 ஆண்டுகளை இழக்க நேரிடும். அறிகுறிகள் இருப்போர், டாக்டர்கள் அறிவுரையின்படி மருந்துகள் எடுத்து கொள்வதும், அவ்வப்போது பரிசோதனை செய்வதும் முக்கியம்.
தமிழக அரசு நடத்திய சோதனையில், ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் அனைவருக்கும் புற்றுநோய் பாதிப்பை கட்டுப்படுத்த முடியும்.
- எஸ்.சரவணன்,
இயக்குநர், அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் ஆராய்ச்சி மையம், காரப்பேட்டை, காஞ்சிபுரம்
- நமது நிருபர் -