பழநி கோயில் உட்பிரகாரத்தில் கடைகள் நீதிமன்ற உத்தரவை அலட்சியப்படுத்தும் நிர்வாகம்
பழநி கோயில் உட்பிரகாரத்தில் கடைகள் நீதிமன்ற உத்தரவை அலட்சியப்படுத்தும் நிர்வாகம்
UPDATED : ஜன 19, 2025 03:48 AM
ADDED : ஜன 19, 2025 02:27 AM

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் பழநி  முருகன் கோயில், கிரிவீதி என எதையும் வணிக பயன்பாட்டிற்கு அனுமதிக்ககூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவை மீறி உட்பிரகாரத்தில் கோயில் நிர்வாகமே வியாபாரம் செய்ய துவங்கியுள்ளது.
பழநி முருகன் கோயிலில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி  அலைபேசி, கேமரா கொண்டு செல்லவும், கோயில் வளாகம் , கிரிவீதி உள்ளிட்ட பகுதிகளை வணிகத்திற்கு பயன்படுத்தக்கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் நீதிமன்ற உத்தரவுகளை தங்களுக்கு சாதகமாக்கி வருவாய் ஈட்டும் பணியில் கோயில் நிர்வாகம் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது.
அலைபேசிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அலைபேசிகளை வாங்கி வைக்க ஆங்காங்கே இடம் கட்டி கட்டணம் வசூலிக்கிறது. அடுத்து கோயில் வளாகத்தில் 'ஸ்பாட் போட்டோ' எடுத்து விற்பனை நடக்கிறது.
இதுவரை கோயில் வெளி பிரகாரத்தில் தான் பஞ்சாமிர்தம், புத்தகம், உடனடி போட்டோ, பிரசாத விற்பனை நடந்தது. இப்போது உட்பிரகாரத்தில் தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும் வழியில் போட்டோ கடை திறக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் ஒதுங்குவதற்கு கூட இடமில்லாதவாறு அனைத்து மண்டபங்களையும் டிக்கெட் தரிசனம், பஞ்சாமிர்தம், போட்டோ, பிரசாத ஸ்டால் என மாற்றிவிட்டனர். தற்போது உட்பிரகாரத்திலும் வியாபாரம் செய்ய  தொடங்கி உள்ளனர்.
வி.எச்.பி.,  திருகோயில், திருமடங்கள் மாநில அமைப்பாளர் செந்தில்குமார் கூறியது: பழநி கோயிலை வியாபார தலமாக மாற்ற முயற்சிக்கின்றனர். பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து தரவில்லை.
ஆனால் எந்தெந்த வழிகளில் வருமானம் ஈட்டலாம் என்பதில் மட்டும் அறநிலையத்துறை அதிக கவனம் செலுத்துகிறது. வணிக நோக்கத்தில் உட்பிரகாரத்திலும் கடை அமைத்திருப்பது பக்தர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக  இதனை  அப்புறப்படுத்த வேண்டும்''  என்றார்.

