மகப்பேறு டாக்டர்கள் பற்றாக்குறை; அரசு மருத்துவமனைகளில் அவலம்
மகப்பேறு டாக்டர்கள் பற்றாக்குறை; அரசு மருத்துவமனைகளில் அவலம்
ADDED : ஜன 09, 2025 06:39 AM

சென்னை: தமிழகத்தில் பல்வேறு அரசு மருத்துவமனைகளில், மகப்பேறு டாக்டர்கள் பற்றாக்குறை நிலவி வருவதால், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில், அரசு தலைமை மருத்துவமனையாக செங்கம் அரசு மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு தினமும் 400க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாகவும், உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர். மாதந்தோறும், 70 பிரசவங்கள் வரை நடக்கின்றன.
இம்மருத்துவமனை, 'சீமாங்' மருத்துவமனை எனப்படும், ஒருங்கிணைந்த தாய்சேய் நல மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
இம்மருத்துவமனையில், தலா ஆறு மகப்பேறு டாக்டர்கள், குழந்தைகள் நல டாக்டர்கள், மயக்கவியல் நிபுணர்கள் இருக்க வேண்டும். ஆனால், தலைமை மருத்துவர் மட்டுமே உள்ளார். இதேபோன்ற நிலை, தமிழகத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் உள்ளது.
இது குறித்து, அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்டக்குழு தலைவர் பெருமாள் பிள்ளை கூறியதாவது:
செங்கம் அரசு மருத்துவமனையில், தலைமை மருத்துவர் மட்டுமே உள்ளார். திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மகப்பேறு துறையில், முதுநிலை மாணவி ஒருவர் கூடுதலாக நியமிக்கப்பட்டு பயிற்சி பெற்று வருகிறார்.
இரண்டு டாக்டர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். அவர்கள் கூடுதல் பணி சுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனியர் டாக்டர் வழிகாட்டுதல்படி தான், முதுநிலை டாக்டர்கள் பயிற்சி பெற வேண்டும்.
ஆனால், பற்றாக்குறை காரணமாக, யாருடைய வழிகாட்டுதல் இல்லாமல், பயிற்சி டாக்டர் சிகிச்சை அளித்து வருகிறார்.
சென்னை ஆர்.எஸ்.ஆர்.எம்., மகப்பேறு மருத்துவமனையில், 10 டாக்டர்; எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில், ஒன்பது டாக்டர் பணி இடங்கள் காலியாக உள்ளன. திருவண்ணாமலை மருத்துவக் கல்லுாரியில் மகப்பேறு துறையில், 20 இடங்களும், வேலுார் மருத்துவக் கல்லுாரியில் மகப்பேறு துறையில், 21 இடங்களும் காலியாக உள்ளன.
தமிழகத்தில், 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட பதிவு செய்த டாக்டர்கள் பணியில் உள்ளனர். ஆனால், அரசு மருத்துவமனைகளில், 19,000 பணியிடங்கள் மட்டுமே உள்ளன.
அரசு மருத்துவமனைகளில், காலிப்பணியிடங்களை நிரப்ப, அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் உள் ளது. முதல்வர் தலையிட்டு, நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப, டாக்டர்கள், நர்ஸ்களை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.