நகர்ப்புற வாழ்விட வாரியத்தில் நில அளவையாளர் பற்றாக்குறை மனைகள் ஒதுக்கும் பணி பாதிப்பு
நகர்ப்புற வாழ்விட வாரியத்தில் நில அளவையாளர் பற்றாக்குறை மனைகள் ஒதுக்கும் பணி பாதிப்பு
ADDED : ஜூலை 29, 2025 07:26 AM
சென்னை : நில அளவையாளர் பற்றாக்குறையால், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மனைகள் ஒதுக்கீடு தொடர்பான பணிகள் முடங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் ஏழை மக்களுக்கு வீடு, மனை வழங்கும் பணிகளை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் செய்து வருகிறது.
இதில், மத்திய - மாநில அரசு நிதி ஒதுக்கீடு அடிப்படையில், நகர்ப்புற வாழ்விட வாரியம் குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்துகிறது.
தவணை முறை குறிப்பாக, பல்வேறு மாவட்டங்களில், ஏழை மக்கள் நீண்ட காலமாக வசித்து வரும் அரசு நிலங்களை முறைப்படுத்தி, அவர்களுக்கான மனை களாக ஒதுக்கப்படுகின்றன.
இவ்வாறு மனைகள் ஒதுக்கப்படும் நிலை யில், அதற்கான தொகையை ஒதுக்கீட்டாளர்கள் தவணை முறையில் செலுத்துகின்றனர்.
இதையடுத்து, தவணை செலுத்தி முடித்தவர்களுக்கு, அந்தந்த மனைக்கான பத்திரங்களை, வாரியம் வழங்க வேண்டும். இந்த பணியில், ஒவ்வொரு நிலத்தையும் முழுமையாக அளந்து, எல்லை மற்றும் பரப்பளவு விபரங்களை, நில அளவையாளர்கள் அளிக்க வேண்டும்.
இதற்காக, வருவாய் துறையில் இருந்து நில அளவையாளர்கள் அயல்பணி அடிப்படையில், நகர்ப்புற வாழ்விட வாரி யத்துக்கு அனுப்பப்படுவர்.
இந்த வாரியத்தில் புதிதாக மனைகளை ஒதுக்குவது முதல், ஏற்கனவே ஒதுக்கப்பட்ட மனைகளின் அளவுகளை சரி பார்ப்பது வரை, நில அளவையாளர்களை நம்பியே உள்ளது.
ஆனால், கடந்த சில மாதங்களாக நில அளவை யாளர்கள் பற்றாக்குறையால், இப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மனை ஒதுக்கீடு கோரியவர்கள், ஏற்கனவே மனை ஒதுக்கீடு பெற்றவர்கள், அடுத்த கட்ட பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர்.
அயல்பணி இது தொடர்பாக, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மனைகள் ஒதுக்கும் திட்டங்களை செயல்படுத்தும்போது, நில அளவையாளர்கள் வருவாய் துறையில் இருந்து அயல்பணி அடிப்படையில் வருவர். மாவட்டம், தாலுகா அளவில் இதற்கான நபர்கள் ஒதுக்கப்படுவர்.
கடந்த சில ஆண்டுகளாக, வருவாய் துறையிலேயே போதிய ஆட்கள் இல்லாததால், அயல்பணி அடிப்படையில் வருவது குறைந்துஉள்ளது. இதனால், வாரிய பணிகளை மேற்கொள்வதில் பிரச்னை ஏற்படுகிறது.
தமிழகத்தில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், 13 கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கோட்டத்திலும், மூன்று மாவட்டங்கள் அடங்கும். இதில் மனை அளவீட்டுக்காக, மாவட்டத்துக்கு, 200 வீதம் விண்ணப்பங்கள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.
27 பேர் ஒதுக்கீடு இது தவிர, வாரிய உத்தரவுகள் அடிப்படையிலும், புதிய திட்டங்களுக்கான நிலங்களை அளக்கும் விண்ணப்பங்களும் காத்திருக்கின்றன.
தற்போது இருக்கும் நில அளவையாளர்களை பயன்படுத்தி, வரிசை முறையில் இந்த விண்ணப்பங்களுக்கு உட்பட்ட நிலங்களை அளக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில், தமிழகம் முழுதும், பொறியியல் படித்தவர்களுக்கு பயிற்சி அளித்து, 807 பேருக்கு வருவாய் துறை நில அளவை உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
இதில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு, 27 பேர் ஒதுக்கப்பட்டுள்ளனர்.
இந்த எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்பதால், கூடுதல் நபர்களை ஒதுக்க கோரி இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.