ஊதியம், பணி நாட்கள் குறைவு ஊர்க்காவல் படையினர் ஓட்டம்
ஊதியம், பணி நாட்கள் குறைவு ஊர்க்காவல் படையினர் ஓட்டம்
ADDED : டிச 20, 2024 12:41 AM
சென்னை:ஊர்க்காவல் படையினருக்கு நாள் ஒன்றுக்கு, 560 ரூபாய் வீதம், ஐந்து நாள் மட்டுமே வேலை தரப்படுவதால், பணியில் இருந்து விலகுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஊர்க்காவல் படையில் ஆண்கள், 12,817; பெண்கள், 2,805 பேர் உள்ளனர். போலீசாருடன் இரவு ரோந்து பணிக்கு செல்லுதல், அதிகாரிகளுக்கு கார் ஓட்டுதல், தபால் எடுத்துச் செல்லுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு மாதத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே பணி வழங்கப்படுகிறது. ஊதியமாக ஒரு நாளைக்கு, 560 ரூபாய் தரப்படுகிறது. ஊதிய உயர்வு அளித்து மாதம் முழுதும் பணி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதற்கு ஏற்ப, 2021 சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 'ஊர்க்காவல் படையினர் எண்ணிக்கை மற்றும் பணி நாட்கள் உயர்த்தப்படும்' என, வாக்குறுதி அளிக்கப்பட்டது. அது கிடப்பில் போடப்பட்டு விட்டதாக அவர்கள் புகார் கூறுகின்றனர்.
அவர்கள் கூறியதாவது:
போதிய ஊதியம் மற்றும் பணி இல்லாததால், ஊர்க்காவல் படையியில் இருந்து, 500க்கும் மேற்பட்டோர் நிரந்தரமாக விலகி விட்டனர். ஊர்க்காவல் படைக்கு புதிதாக ஆட்களை தேர்வு செய்யும் போது, நாள் ஒன்றுக்கு 55 ரூபாய் வீதம் வழங்கப்பட்டு, 45 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
சீருடை, பயிற்சியாளருக்கான செலவுடன் சேர்த்து அரசுக்கு, ஊர்க்காவல் படையில், ஒரு நபரை தயார் செய்ய, 5,000 ரூபாய் வரை செலவு செய்யப்படுகிறது.
தற்போது, பணி விலகல் அதிகரித்து வருவதால், அவர்களுக்கு அரசு செலவு செய்த தொகை வீணாகி வருகிறது. திரிபுரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களை போல, தமிழக அரசும் ஊதிய உயர்வு மற்றும் பணி நாட்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.