'மகளுக்கு திருமணம் செய்து வைத்த ஜக்கி மற்றவர் துறவியாவதை ஊக்குவிக்கலாமா?'
'மகளுக்கு திருமணம் செய்து வைத்த ஜக்கி மற்றவர் துறவியாவதை ஊக்குவிக்கலாமா?'
ADDED : அக் 01, 2024 06:23 AM

சென்னை: 'தன் மகளுக்கு ஜக்கிவாசுதேவ் திருமணம் செய்து வைத்து, வாழ்க்கை அமைத்து கொடுக்கும் போது, மற்ற பெண்கள் மொட்டை அடித்து, துறவியர் ஆவதை ஊக்குவிக்கலாமா' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
கோவை வடவள்ளியை சேர்ந்த பேராசிரியர் காமராஜ் தாக்கல் செய்த மனு: யோகா கற்க ஈஷா மையத்துக்கு சென்ற என் மகள்கள் கீதா, லதா, அங்கேயே தங்கி விட்டனர். தங்களை தொந்தரவு செய்யக்கூடாது என, அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஈஷா மையத்துக்கு எதிராக, நாங்கள் எந்த போராட்டத்திலும் ஈடுபடக்கூடாது எனவும், அவ்வாறு செய்தால் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதாக, இரண்டாவது மகள் வாயிலாக நிர்ப்பந்திக்கின்றனர்.
என் மகள்கள் இருவரும், ஈஷா மையத்தில் இருந்து வெளியே வந்தால், அவர்களை தொந்தரவு செய்ய மாட்டோம். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சிவஞானம் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் மகள்கள் இருவரும் நீதிபதிகள் முன் ஆஜராகினர். அவர்களிடம் நீதிபதிகள் விசாரித்தனர். பின், பெற்றோரிடமும் விசாரணை நடத்தினர்.
தன் மகளுக்கு திருமணம் செய்து வைத்து, செட்டில் செய்த ஜக்கிவாசுதேவ், மற்ற இளம் பெண்கள் மொட்டை அடித்து, துறவியர் ஆவதை ஊக்குவிக்கலாமா என்று, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.அதற்கு, நீதிமன்றத்தில் ஆஜரான இருவரும், 'திருமணம் செய்து கொள்வது, அந்த பெண்ணின் விருப்பம்' என, பதில் அளித்தனர்.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.புருஷோத்தமன், ''ஈஷா மையத்தின் நடமாடும் மருத்துவ சேவையில் பணியாற்றிய மருத்துவர், பள்ளி குழந்தைகளை பாலியல் தொந்தரவு செய்ததாக, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரரின் மகள்கள் இருவரும், கோவை ஈஷா மையத்தில் சேர்ந்துள்ளனர். பெண்கள் சிலரை மூளைச்சலவை செய்து, துறவியராக ஈஷா மையம் மாற்றுவதாகவும், பெற்றோர், உறவினர்களை சந்திக்க அனுமதி மறுப்பதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.மையத்தில் நிலவும் சூழ்நிலையை, மனுவில் விமர்சித்துள்ளார். ஈஷா மையத்தின் மருத்துவர் ஒருவருக்கு எதிராக, போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், மனுதாரர் தெரிவித்தார்.
குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக, மனுதாரரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
ஈஷா மையத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் தன்மை, நீதிமன்றத்தில் ஆஜரான இரு பெண்களும் பேசிய விதத்தை பார்க்கும் போது, குற்றச்சாட்டுகளின் பின்னணியில் உள்ள உண்மையை புரிந்து கொள்ள, மேலும் விரிவாக ஆராய வேண்டியதுள்ளது.
எனவே, ஈஷா மையத்துக்கு எதிராக பதிவான குற்ற வழக்குகளின் விபரங்களை, மனுதாரரும், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞரும் தாக்கல் செய்ய வேண்டும்.
ஈஷா மையத்துக்கு எதிரான வழக்குகளை கைவிடும் வரை, இளைய மகள் லதா, சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதாக, மனுதாரருக்கு, மொபைல் போன் வாயிலாக மூத்த மகள் கீதா தெரிவித்துள்ளார். இதுகுறித்தும், கோவை போலீசார் விசாரித்து, அறிக்கை அளிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
விசாரணையை, வரும் 4ம் தேதிக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.