சோதனை பாதையில் சுப்மன் கில்... கிரெக் சாப்பல் கணிப்பு
சோதனை பாதையில் சுப்மன் கில்... கிரெக் சாப்பல் கணிப்பு
ADDED : ஜூலை 20, 2025 07:17 AM

லண்டன்: ''சுப்மன் கில் தெளிவான சிந்தனையுடன் அணியை வழிநடத்தினால், இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பார்,'' என கிரெக் சாப்பல் தெரிவித்தார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ('ஆண்டர்சன் - சச்சின் டிராபி') பங்கேற்கிறது. முதல் 3 போட்டி முடிவில் இங்கிலாந்து 2-1 என முன்னிலையில் உள்ளது. நான்காவது டெஸ்ட் வரும் 23ல் மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் துவங்குகிறது. இதில், இந்தியா கட்டாயம் வெல்ல வேண்டும். இளம் கேப்டன் சுப்மன் கில் 25, பேட்டிங்கில் அசத்துகிறார். 3 போட்டிகளில் 607 ரன் (சராசரி 101.16) குவித்துள்ளார். தலைமை பணியில் முன்னேற்றம் தேவை.
இது குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிரெக் சாப்பல் (ஆஸி.,) கூறியது:
கடைசி இரு போட்டிக்கு இந்தியா தயாராகி வரும் நிலையில், அனைவரது கவனமும் சுப்மன் மீது திரும்பியுள்ளது. பேட்டிங்கில் பிரகாசிக்கும் இவருக்கு, கேப்டனாக உண்மையான சோதனை ஆரம்பமாகிறது. செயல் மூலம் ஆதிக்கம் செலுத்துவது அவசியம். தனக்கு நம்பிக்கையான வீரர்களை கண்டறிந்து, வெற்றி பெறக் கூடிய அணியை தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு வீரரின் பணி குறித்து அவரிடம் விளக்க வேண்டும். சிறந்த அணிகள் ரன்னை எளிதில் விட்டுக் கொடுக்காது. 'கேட்ச்' வாய்ப்பை நழுவவிடாது. இந்தியாவும் 'பீல்டிங்கில்' சொதப்பக் கூடாது என்பதில் கில் கவனமாக இருக்க வேண்டும்.
பேசுவது அவசியம்
சுப்மனை பொறுத்தவரை 'பேட்' மூலம் எளிதாக பேசுகிறார். இதே போல சக வீரர்களிடம் சகஜமாக பேசி, அவர்கள் மனதில் தன்னம்பிக்கையை விதைக்க வேண்டும். பேட்டர்களிடம் 'பார்ட்னர்ஷிப்' அமைத்து விளையாடுவதன் முக்கியத்துவத்தை கூறலாம். பவுலர்களிடம் விக்கெட் எடுப்பது மட்டும் முக்கியமல்ல; தொடர்ந்து சிறப்பாக பந்துவீசி எதிரணிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தலாம். வீரர்களிடம் உள்ள திறமையை வெளிக்கொண்டு வர வேண்டும்.
வரும் போட்டிகளில் சுப்மன் தெளிவான சிந்தனையுடன் வலிமையாக அணியை வழிநடத்தினால், இங்கிலாந்து தொடரின் போக்கை மட்டும் தீர்மானிக்க மாட்டார். இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தையும் வடிவமைப்பார்.இவ்வாறு கிரெக் சாப்பல் கூறினார்