ADDED : பிப் 18, 2024 06:37 AM

அழகின் நுட்பங்களை அறிந்தவர்கள், கலை நுட்பங்களை ரசிக்கத் தெரிந்தவர்கள் படைப்பாளிகளாக இருந்துவிட்டால் அனைவரையும் வியக்க வைக்கும் இவர்களின் படைப்பு. டிஜிட்டல் உலகில் விரல்களின் நுனியில் சிற்பங்களை மெஹந்தியில் தீட்டுகிறார் மதுரையை சேர்ந்த சுவேதா.
அவரின் தனித்திறனை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்...
சிறுவயதில் ஓவியம் வரைவதில் நாட்டம் இருந்தது. பிளஸ் டு படிக்கும் போது மெஹந்தியில் ஆர்வம் வந்தது. முறைப்படி கவிதா என்பவர் மூலம் கற்றேன். கல்லுாரியில் பி.காம். படிப்பில் சேர்ந்த சில மாதங்களில் கொரோனா பரவல் காரணமாக வீட்டில் இருக்கும் நிலை ஏற்பட்டது. தீவிரமானது மெஹந்தி ஆர்வம். முதலில் வீட்டில் உள்ளவர்களுக்கு விருப்பமான கோலங்களை வரைந்து தந்து ரசித்தேன்.
அம்மாவின் உந்துதலால் அக்கம் பக்க விசேஷங்களுக்கு வரைந்து கொடுத்தேன். மெஹந்தியில் ராஜா, ராணி, தெய்வங்கள் என வரையத் தொடங்கினேன். இதற்கு பலர் மார்க்கிங் ஸ்டிக்கர் வைத்துக்கொள்வர். நான் மனதில் ஒரு முறை உள்வாங்கி கோன் மூலம் வரைகிறேன். மருதாணி பவுடர், லெமன், சீனி உள்ளிட்ட கெமிக்கல் இல்லாத கலவையை பயன்படுத்துவதால் அலர்ஜி ஏற்படுவதில்லை. மணப்பெண்களுக்கு பிடித்த தெய்வங்கள், வரைந்து கொடுப்பேன்.
ஒருமுறை நான் என் முகத்தை மெஹந்தியாக வரைந்தபோது அனைவரும் பாராட்டினார்கள். இப்பொழுது மணப்பெண்களின் முகத்தை அவர்கள் கையில் வரைகிறேன். வளைகாப்பு பெண்களின் கைகளில் குழந்தைகளின் படங்களை வரைகிறேன். உறவினர்கள், நண்பர்கள் என நான் வரையும் மெஹந்திக்கு ரசிகர்கள் எண்ணிக்கை பெருகி விட்டது.
பொழுதுபோக்காக ஆரம்பித்த விஷயம், இன்று என்னை சுயகாலில் நிற்க வைத்துள்ளது. எனது தேவைக்கு பெற்றோரை தொந்தரவு செய்யாமல் வருமானம் ஈட்ட முடிகிறது. திறமையை வெளிப்படுத்தினால் நம்மை வாழ்த்த வையத்தில் ஆயிரம் பேர் உள்ளனர் என்றார்.