ஓசியில் புல்லட்டுக்கு சர்வீஸ்! மெக்கானிக்கை தாக்கிய எஸ்.ஐ., சஸ்பெண்ட்
ஓசியில் புல்லட்டுக்கு சர்வீஸ்! மெக்கானிக்கை தாக்கிய எஸ்.ஐ., சஸ்பெண்ட்
ADDED : ஜன 06, 2025 10:10 PM

மதுரை; மதுரை அருகே புல்லட்டிற்கு 'ஓசி'யாக பழுது நீக்கி தராத மெக்கானிக்கிற்கு 'பளார்' விட்ட எஸ்.ஐ., சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.
நிலக்கோட்டையைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர், மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் இருசக்கர வாகனம் பழுதுநீக்கும் மெக்கானிக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். 3 ஆண்டுகள் முன்பு இவரது கடைக்கு வந்து வாடிப்பட்டி சார்பு எஸ்.ஐ., அண்ணாதுரை என்பவர் அறிமுகமாகி உள்ளார். அடிக்கடி தமது புல்லட்டை மெக்கானிக் சீனிவாசனிடம் கொடுத்து சர்வீஸ் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
ஆனால் புல்லட்டை சரி செய்த பின்னால், அதற்கான பணத்தை சீனிவாசனுக்கு எஸ்.ஐ., அண்ணாதுரை தராமல் இருந்துள்ளதாக தெரிகிறது.
புல்லட்டை தொடர்ந்து சர்வீஸ் செய்துவிட்டு இதுவரை கிட்டத்தட்ட 8000 ரூபாய் வரை தராமல் வாகனத்தை கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் தற்போது பாலமேடு காவல்நிலையத்தில் சிறப்பு எஸ்.ஐ., ஆக பணி மாறுதல் பெற்ற பின்னர், தம்முடன் பணிபுரியும் காவலர்களின் பைக்கையும் சர்வீஸ் செய்து தருமாறு சீனிவாசனை வற்புறுத்தியதாக தெரிகிறது. செல்போனிலும் சீனிவாசனை தொடர்பு கொண்டு தொந்தரவு செய்ய, ஒரு கட்டத்தில் அவரது போன் அழைப்பை சீனிவாசன் நிராகரித்ததாக கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த அண்ணாதுரை, கடந்த 4ம் தேதி (ஜன,) சீனிவாசனின் மெக்கானிக் கடைக்குச் சென்று அவரை மிரட்டியதாக தெரிகிறது. சினிவாசனை தாக்கி கார் ஒன்றில் ஏற்றும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியானது.
புல்லட் ஒன்றை ஓசியில் பழுது நீக்கி பணம் கொடுக்காமல் சரமாரியாக தாக்கியது குறித்தும், கஞ்சா வழக்கு போடுவேன் என்று மிரட்டியது குறித்தும் வீடியோ ஆதாரத்துடன் மெக்கானிக் சீனிவாசன் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் வீடியோ வைரலாகிவிட, மெக்கானிக்கிற்கு 'பளார்' விட்ட எஸ்.ஐ., அண்ணாதுரையை 'சஸ்பெண்ட்' செய்து தென்மண்டல ஐ.ஜி., பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டுள்ளார்.

