2ஜி விவகார ஆடியோ ரிலீஸ் விருந்து வைக்காததால் உடன்பிறப்புகள் 'அப்செட்'
2ஜி விவகார ஆடியோ ரிலீஸ் விருந்து வைக்காததால் உடன்பிறப்புகள் 'அப்செட்'
ADDED : ஜன 20, 2024 12:16 AM

பெரம்பலுார்:'2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கு குறித்த ஆடியோ பதிவை, தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை வெளியிட்டதால், விரக்தியடைந்த தி.மு.க., எம்.பி. ஆ.ராஜா, பொங்கல் பண்டிகை கறி விருந்து வைக்காததால் கட்சியினர் ஏமாற்றம் அடைந்தனர்.
பொங்கல் பண்டிகை முடிந்த பின் காணும் பொங்கல் அன்று, கறி நாளில் ஆ.ராஜா, அவரது சொந்த ஊரான வேலுார் கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில், ஆண்டுதோறும் மட்டன் பிரியாணி விருந்து வைப்பார்.
தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், முக்கிய பிரமுகர்கள் மதிய விருந்து சாப்பிட்டு ஆ.ராஜாவை நேரில் சந்தித்து செல்வதும், கட்சியினருக்கு, 100 முதல் 5,000 ரூபாய் வரை பொங்கல் பரிசு கொடுப்பதும் வழக்கம்.
இந்தாண்டு '2ஜி' வழக்கு தொடர்பாக ஆ.ராஜா மற்றும் முன்னாள் காவல் துறை அதிகாரி ஜாபர் சேட் ஆகியோர் பேசிய பேச்சின் ஆடியோ பதிவு வெளியானதால், அதிர்ச்சி அடைந்த ஆ.ராஜா டில்லிக்கு சென்றுவிட்டார்.
இதனால், ஆண்டுதோறும் வழக்கம் போல கறி விருந்து மற்றும் பணம் பெற வந்த கட்சியினர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறுகையில், 'ஆ.ராஜாவின் அண்ணன் மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன் இறந்துவிட்டார். அதனால், இந்த ஆண்டு பொங்கல் நாளில் விருந்து வைக்கப்படவில்லை' என்றனர்.
ஆனால், பெரம்பலுார் பாலக்கரை பகுதியில் உள்ள ஆ.ராஜா முகாம் அலுவலகத்தில் கட்சியினர், பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு, பொங்கலுக்கு முன்னதாகவே பொங்கல் பரிசாக பணம் வழங்கப்பட்டது.