'சிட்கோ' அடுக்குமாடி தொழிற்கூடம் குத்தகை 30 ஆண்டாக குறைப்பு
'சிட்கோ' அடுக்குமாடி தொழிற்கூடம் குத்தகை 30 ஆண்டாக குறைப்பு
ADDED : ஜன 22, 2025 10:55 PM

சென்னை:தமிழகத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தொழில் துவங்க வசதியாக, உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய தொழிற்பேட்டைகளை, 'சிட்கோ' எனப்படும் தமிழக சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் அமைக்கிறது.
இந்நிறுவனம், குறுந்தொழில் நிறுவனங்கள், குறைந்த முதலீட்டில் விரைவாக தொழில் துவங்க, அடுக்குமாடி தொழிற்கூடங்களை அமைத்து வருகிறது.
அதன்படி, சென்னை கிண்டி மற்றும் அம்பத்துாரில், 150 கோடி ரூபாய் செலவில், 264 அலகுகளுடன் அடுக்குமாடி தொழிற்கூடங்கள் கட்டப்பட்டு, கடந்த ஆண்டு இறுதியில் தொழில்முனைவோருக்கு ஒதுக்கப்பட்டன.
சேலம் மாவட்டத்தில், கொலுசு உற்பத்தி நிறுவனங்களுக்காக அடுக்குமாடி தொழில் வளாகம் கட்டும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது.
மேலும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், மதுரை கே.புதுார் மற்றும் சக்கிமங்கலம், கோவை குறிச்சியில், 184 கோடி ரூபாயில், 441 அலகுகளுடன் அடுக்குமாடி தொழிற்கூடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. தற்போது, இந்த தொழிற்கூட அலகுகளின் குத்தகை காலம், 99 ஆண்டுகளாக உள்ளது.
பராமரிப்பு, குத்தகை கட்டண செலவுகள் குறைய, குத்தகை காலத்தை குறைக்குமாறு அரசுக்கு, தொழில்முனைவோர் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, அடுக்குமாடி தொழிற்கூடங்களுக்கான குத்தகை காலத்தை, 99 ஆண்டுக்கு பதில், 30 ஆண்டுகளாக, சிட்கோ நிறுவனம் குறைத்துஉள்ளது.

