ADDED : ஜூலை 23, 2025 03:01 AM

தஞ்சாவூர்: ''அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், தாலிக்கு தங்கம் திட்டத்தில், நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் பட்டு சேலை இலவசமாக வழங்கப்படும்,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தார்.
'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' பிரசார பயணத்தின் ஒரு பகுதியாக கும்பகோணம் வந்த பழனிசாமி, அங்கு நெசவாளர்களை சந்தித்து, அவர்களின் கோரிக்கைளை கேட்டறிந்தார்.
நெசவாளர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:
தி.மு.க., ஆட்சியில், நெசவாளர்கள், விவசாயிகள் என யாருக்கும் எந்த நன்மையும் செய்யவில்லை. மக்கள் சேவை செய்யும் கட்சி என்றால், அது அ.தி.மு.க., மட்டும் தான். நான் பிரசார பயணம் செல்லும் இடங்களில் எல்லாம், மக்கள் என்னை வரவேற்கின்றனர். அதனால், அ.தி.மு.க., நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
மீண்டும் ஆட்சிக்கு வந்த பின், நெசவாளர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளேன். அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், மீண்டும் முழு வேகத்தில் தாலிக்கு தங்கம் திட்டம் செயல்படுத்தப்படும். அத்திட்டத்தில், நெசவாளர்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பட்டு சேலைகளையும் இலவசமாக வழங்க திட்டம் வைத்துள்ளோம். அதை செயல்படுத்தி, நெசவாளர்கள் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்துவோம்.
நெசவாளர்களுக்கு, அரசு வழங்கும் மானியம் உயர்த்தி வழங்கப்படும். நெசவாளர்களுக்கு, பசுமை வீடு கட்டித்தரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.