ADDED : ஜன 14, 2025 11:25 PM

அன்றாட உணவில் கீரைகளை சேர்த்துக் கொள்வது உடல் நலத்திற்கு மட்டுமல்ல சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் நல்லது.
தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் முக்கிய உணவுப்பொருளாக கீரை விளங்குகிறது. இதன் வகைகளும், சுவையும், நன்மைகளும் எண்ணற்றவை. கீரையில் விட்டமின் ஏ, சி, கே ஊட்டச்சத்துகள் அதிகமாக உள்ளன. இதில் உள்ள இரும்புச்சத்து ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது, நார்ச்சத்தானது மலச்சிக்கலை குறைக்க உதவுகிறது. இவற்றில் உள்ள 'ஆன்டி ஆக்சிடன்கள்' நரம்பு மண்டல ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
மருத்துவ குணம் கொண்ட கீரைகளை சூப்பாக, பொரியல், கூட்டாக செய்து சாப்பிடலாம். கீரைகள் குறைந்த நாட்களில் அறுவடைக்கு தயாராவது மற்றும் அனைத்து சூழ்நிலைகளிலும் வளரக்கூடியதாக இருப்பதால் அதிகமாக பயிரிடப்படுகிறது. கீரையில் பல்வேறு ரகங்கள் இருந்த போதிலும் தரமான விதைகள் கிடைப்பதில்லை. தரமான விதைகளை உற்பத்தி செய்வது பற்றிய தொழில்நுட்ப முறைகளை விவசாயிகள் அறிந்து கொள்ள வேண்டும்.
ரகங்கள்: கோ 1, கோ 2, கோ 3, கோ 4, கோ 5, மற்றும் பி.எல்.ஆர். 1 ரகங்களை எல்லா பருவங்களிலும் பயிரிடலாம். விதைக்காக எனில் மார்ச் (பங்குனி) மற்றும் ஜூலை (ஆனி) மாதங்களில் விதைப்பதே நல்லது.
நடவு பாத்தி பராமரிப்பு
ஒரு எக்டேருக்கு 1.5 -- 2 கிலோ விதைகள் தேவைப்படும். பாத்திகளில் அடியுரமாக ஏக்கருக்கு 18 கிலோ யூரியா, 50 கிலோ சூப்பர் பாஸ்பேட், 8 கிலோ பொட்டாஷ் உரங்களை மண்ணுடன் கலந்து விட வேண்டும். அதன் பின் 30 செ.மீ., ஆழமுள்ள கோடுகள் வரைந்து அதன் மேல் தொடர்ச்சியாக விதைகளை துாவ வேண்டும். விதைகளை மண் அல்லது மணல் கொண்டு லேசாக மூடவேண்டும். விதைகள் முளைத்த 10 முதல் 15 நாட்கள் கழித்து 12 முதல் 15 செ.மீ. இடைவெளி விட்டு செடிகளை கலைத்து விட்டால் அவற்றின் வளர்ச்சி செழிப்பாக இருக்கும்.
பயிர் விலகு துாரம் அவசியம்
கீரை அயல் மகரந்தச் சேர்க்கையுடைய பயிர் என்பதால் ஆதார விதை பயிருக்கு 800 மீட்டரும், சான்றுநிலை விதை பயிருக்கு 100 மீட்டரும் பயிர் விலகு துாரம் இருக்க வேண்டும்.
அறுவடையும், விதை பிரிப்பும்
கீரை விதைப்பயிரில் ஓரிரு அறுவடைகளை கீரைக்காக எடுக்கலாம். இவ்வாறு செய்வதால் கீரைச்செடிகள் மேலும் வளர்ந்து அதிகளவில் பூங்கொத்துக்கள் உருவாகி அதிக விதை மகசூல் கிடைக்கும். விதைகள் முதிர்ச்சி அடையும் தருணத்தில் செடிகள் மற்றும் பூங்கொத்துக்களின் நிறம் மஞ்சள் அல்லது பழுப்பு நிறமாக மாறிவிடும். அச்சமயத்தில் அறுவடை செய்யவேண்டும்.
தார்பாலின் விரிப்பின் மீது ஓரிரு நாட்கள் வெயிலில் அறுவடை செய்த பூங்கொத்துகளை காய விடவேண்டும். காய்ந்த பின் குச்சியால் அடித்து விதைகளை பிரிக்கலாம். அல்லது சொரசொரப்பான தரைகளில் தேய்த்து விதைகளை எளிதாக பிரிக்கலாம். விதைகளை காற்றில் துாற்றி துாசியை அகற்ற வேண்டும்.
விதைத்தரம் உயர்த்துதல்
விதையின் ஈரப்பதம் 8 -- 9 சதவீதம் இருக்குமாறு வெயிலில் ஒரிரு நாட்கள் காயவைக்கவும். பின்பு காற்று துாற்றுவான் மூலம் துாசியை பிரித்து விதைகளை தரம் உயர்த்த வேண்டும். இம்முறையில் ஏக்கருக்கு 100 முதல் 200 கிலோ விதைகள் கிடைக்கும்.