கல்லால் தாக்கியதில் மாணவருக்கு கண் பாதிப்பு; இழப்பீடு வழங்கும் தனி நீதிபதியின் உத்தரவு ரத்து
கல்லால் தாக்கியதில் மாணவருக்கு கண் பாதிப்பு; இழப்பீடு வழங்கும் தனி நீதிபதியின் உத்தரவு ரத்து
ADDED : அக் 10, 2024 06:33 AM
மதுரை : கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு பள்ளியில் படித்த மாணவனை மற்றொரு மாணவன் கல்லால் தாக்கியதில் காயமடைந்ததற்கு ரூ.25 லட்சம் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இரு நீதிபதிகள் அமர்வு ரத்து செய்தது.
ஒரு பள்ளியில் மாணவர் ஒருவர் ஒன்பதாவது வகுப்பு படித்தார். பள்ளி நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி சிறப்பு பயிற்சி வகுப்பில் பங்கேற்றார்.
அவரை வகுப்பு இடைவேளையின்போது சகமாணவர் ஒருவர் கல்லால் தாக்கினார். தப்பிக்க முயன்றபோது ஒன்பதாம் வகுப்பு மாணவனின் கண்ணில் கல் விழுந்தது. வலது கண்ணில் பார்வையை இழந்தார். இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி அம்மாணவனின் தாய் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
தனிநீதிபதி,'ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்,' என உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து பள்ளிக் கல்வித்துறை செயலர், கன்னியாகுமரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், தக்கலை கல்வி மாவட்ட அலுவலர் மேல்முறையீடு செய்தனர்.
நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது.
அரசு தரப்பு: அதிகாரிகளுக்கு நோட்டீஸ், மனு எதுவும் அனுப்பாமல் தனி நீதிபதி முன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சம்பவத்திற்கும் அதிகாரிகளுக்கும் தொடர்பு இல்லை. இரு மாணவர்களுக்கிடையே சண்டை ஏற்பட்டது. ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. இதை தனிநீதிபதி பரிசீலிக்கத் தவறிவிட்டார். இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதிகள்: சம்பந்தப்பட்ட தரப்பினர் விளக்கமளிக்க வாய்ப்பளிக்க வேண்டும். முறையான ஆவண ஆதாரங்கள் இல்லாமல் தனி நீதிபதி முடிவு செய்திருக்கக்கூடாது.
இச்சம்பவம் மேல்முறையீடு செய்த அரசு தரப்பால் நடந்தது என்பதை நிரூபிக்க எந்த ஒரு காரணத்தையும் இந்நீதிமன்றம் கண்டு பிடிக்கவில்லை. சம்பவம் சக மாணவரால் நடந்துள்ளது.
குற்றச்சாட்டுகளை நிரூபிக்க சில ஆதாரங்கள் தேவை. தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவனுக்காக சட்டத்திற்குட்பட்டு தாய் நிவாரணம் தேடலாம். இவ்வாறு உத்தர விட்டனர்.

