சார் - பதிவாளர் ஆபீஸ்களில் பத்திரப்பதிவுக்கு புதிய வசதி
சார் - பதிவாளர் ஆபீஸ்களில் பத்திரப்பதிவுக்கு புதிய வசதி
ADDED : மார் 02, 2024 12:36 AM
சென்னை:சார் - பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப் பதிவுக்கு, 'டோக்கன்' எண், பெயர் ஆகியவற்றை காட்சிப்படுத்தும் புதிய வசதி நேற்று துவக்கப்பட்டது.
பத்திரப் பதிவுக்கு வருவோருக்கு, 'டோக்கன்' எண் அடிப்படையில் நேரம் ஒதுக்கப்படுகிறது. இருப்பினும், எப்போது யார் செல்ல வேண்டும் என்பதை வரிசைப்படுத்துவதில் குழப்பம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால், வரிசை விபரம், காத்திருப்போருக்கு தெளிவாக தெரிய, புதிய வசதி ஏற்படுத்தப்படும் என்று பதிவுத்துறை அறிவித்து இருந்தது.
அதன்படி, பத்திரப் பதிவுக்கான டோக்கன் எண், விண்ணப்பதாரர் பெயர் ஆகியவற்றை தெளிவாக காட்சிப்படுத்தும் பெரிய திரை வசதி, சார் - பதிவாளர் அலுவலகங்களில், 3.64 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு உள்ளது.
காட்சி வாயிலாக தெரியபடுத்துவதுடன் குரல் வழி அறிவிப்பும் இதில் மேற்கொள்ளப்படும்.
சென்னை, தி.நகர் சார் - பதிவாளர் அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, இந்த புதிய வசதியை துவக்கி வைத்தார்.
அப்போது, அவர் கூறியதாவது:
நடப்பு நிதி ஆண்டில், பிப்., இறுதிவரை பத்திரப்பதிவு வாயிலாக, 16,653.32 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வசூலானதை விட, 1,121.60 கோடி ரூபாய் கூடுதல்.
கடந்த, 2023 பிப்ரவரி மாதத்தில், 1,594 கோடி ரூபாய் வசூலானது; நடப்பு பிப்ரவரியில், 1,812.70 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

