நிலத்தின் அளவுகளை 'ஆன்லைன்' முறையில் சரி பார்க்க சார் - பதிவாளர்களுக்கு உத்தரவு
நிலத்தின் அளவுகளை 'ஆன்லைன்' முறையில் சரி பார்க்க சார் - பதிவாளர்களுக்கு உத்தரவு
ADDED : ஜன 12, 2025 12:21 AM

சென்னை: வீடு, மனை விற்பனை தொடர்பான பத்திரங்களில் உள்ள நில அளவு விபரங்களை, 'ஆன்லைன்' முறையில் பட்டா மற்றும் வரைபடத்துடன் ஒப்பிட்டு சரிபார்க்க, சார் - பதிவாளர்களுக்கு பதிவுத்துறை உத்தரவிட்டுஉள்ளது.
தமிழகத்தில் நிலத்தின் பட்டா, நில அளவை வரைபடம் ஆகியவை, 'டிஜிட்டல்' முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த விபரங்களை, பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்; நகல் எடுக்கலாம்.
இந்நிலையில், வீடு, மனை வாங்குவது தொடர்பான பத்திரங்களை, சார் - பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்கின்றனர். பெரும்பாலும், தாய் பத்திரத்தின் அடிப்படையில் தான், அடுத்தடுத்த கிரைய பத்திரங்களில் நிலத்தின் அளவு குறிப்பிடப்படும்.
பெரும்பாலான சமயங்களில் பத்திரத்தில் உள்ள நில அளவுக்கு சற்று மாறுபட்டதாக பட்டா, நில அளவை வரைபடத்தில் அளவுகள் காணப்படும்.
ஆன்லைன் முறையில் பத்திரப்பதிவுக்கான, 'ஸ்டார் 2.0' மென்பொருளுடன், வருவாய் துறையின், 'தமிழ்நிலம்' தகவல் தொகுப்பு இணைக்கப்பட்டுள்ளது.
இதனால், பட்டாவில் உள்ள நிலத்தின் அளவு பத்திரத்தில் இருந்தால் மட்டுமே, பத்திரப்பதிவுக்கான 'டோக்கன்' பெற முடியும். இதில் பிரச்னை ஏற்படும் நிலையில், பத்திரங்களை பதிவு செய்யாமல் சார் - பதிவாளர்கள் திருப்பி அனுப்பும் நிலை ஏற்படுகிறது.
இதுகுறித்து, பதிவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பதிவுக்கு தாக்கலாகும் பத்திரங்களில் உள்ள நில அளவுகளை, ஆன்லைன் முறையில் பட்டா மற்றும் நில அளவை வரைபடத்துடன், சார் - பதிவாளர்கள் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
இதில் வேறுபாடு இருந்தால், பட்டாவில் உள்ள அளவுக்கு ஏற்ப, பத்திரத்தின் சொத்து விபரங்கள் பகுதியில் திருத்தங்கள் மேற்கொள்ள, சார் - பதிவாளர் பரிந்துரைக்கலாம்.
இதன் அடிப்படையில் பத்திரத்தில் திருத்தம் செய்து, விண்ணப்பதாரர் ஒப்புதலுடன் பதிவு செய்யலாம். இதனால், நில அளவு வேறுபாடு பிரச்னையால், பத்திரப்பதிவு பாதிப்பதை தடுக்கலாம் என, சார் - பதிவாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுஉள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.