பத்திரப்பதிவு தாமதத்தை தவிர்க்க சார் - பதிவாளர்களுக்கு கட்டுப்பாடுகள்
பத்திரப்பதிவு தாமதத்தை தவிர்க்க சார் - பதிவாளர்களுக்கு கட்டுப்பாடுகள்
ADDED : டிச 18, 2024 09:26 PM
சென்னை:சார் - பதிவாளர் அலுவலகங்களில், குறிப்பிட்ட நேரத்தில் பத்திரப்பதிவு நடப்பதை உறுதி செய்ய, சார் - பதிவாளர்களுக்கு கிடுக்கிப்பிடி கட்டுப்பாடுகளை, பதிவுத் துறை பிறப்பித்துள்ளது.
மக்கள் காத்திருப்பு
தமிழகத்தில் உள்ள, 582 சார் - பதிவாளர் அலுவலகங்களில், பத்திரங்களை பதிவு செய்ய, சொத்து விபரங்களை, 'ஆன்லைன்' முறையில் உள்ளீடு செய்ய வேண்டும்.
தகவல் சரிபார்க்கப்பட்ட பின், பத்திரப் பதிவுக்கான நேரம் ஒதுக்கப்படும். இணையதளம் வாயிலாகவே இதற்கான நாள், நேரம், வரிசை எண் அடங்கிய 'டோக்கன்' வழங்கப்படும்.
தினமும் காலை, 10:00 மணி முதல் மாலை, 3:00 மணி வரை பத்திரப்பதிவு மேற்கொள்ளப்பட வேண்டும்.
பெரும்பாலான அலுவலகங்களில், இதை கடைப்பிடிப்பதில்லை என புகார்கள் வந்துள்ளன. பணிகள் துவங்குவதே, ஒரு மணி நேரத்துக்கு மேல் தாமதமாகும்போது, டோக்கன் வரிசைபடி பத்திரப்பதிவு முடியாமல், மக்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.
தாமதம்
இதையடுத்து, சார் -பதிவாளர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
அதுபற்றி, பதிவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தினமும் காலையில், 10:00 மணிக்கு பத்திரப்பதிவை துவங்க வேண்டும் என, அனைத்து சார் -- பதிவாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதில் தாமதம் ஏற்படுவதை தடுக்க, தினமும் காலை 10:30 மணிக்குள்வருகை பதிவேடு விபரங்களை, 'வாட்ஸாப்' வாயிலாக, மேலதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இருப்பினும், சார் - பதிவாளர்கள் வருகை பதிவு செய்தாலும், பத்திரப் பதிவை துவங்காமல் தாமதம் செய்வது தெரிய வந்தது.
நடவடிக்கை
இதையடுத்து, தினமும்காலையில், பத்திரப் பதிவுக்கான இணையதளத்தில், 'லாக் இன்' செய்து, அதன் கணினி திரை விபரத்தை புகைப்படம் எடுத்து, 'வாட்ஸாப்' வாயிலாக மேலதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும்.
இந்த நடைமுறை சரியாக கடைப்பிடிக்கப்படுகிறதா என்பது, தொடர்ந்து கண்காணிக்கப்படும். தவறும் சார் - பதிவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இதனால், குறித்த நேரத்தில் பத்திரப்பதிவு மேற்கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.