சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசனத்துக்கு வைகை அணையில் நீர் திறக்கப்பட்டது கரையோர மக்களுக்கு நீர்வளத்துறை எச்சரிக்கை
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசனத்துக்கு வைகை அணையில் நீர் திறக்கப்பட்டது கரையோர மக்களுக்கு நீர்வளத்துறை எச்சரிக்கை
ADDED : நவ 11, 2024 12:27 AM

ஆண்டிபட்டி ; சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட வைகை பூர்வீக பாசன நிலங்களுக்காக வைகை அணையில் இருந்து வினாடிக்கு 3000 கன அடி வீதம் ஆற்றின் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி நீர்வளத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
வைகை அணையில் இருந்து ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள வைகை பூர்வீக பாசனப்பகுதி 1, 2, 3ல் உள்ள நிலங்களுக்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று காலை 11:00 மணிக்கு பரமக்குடி செயற்பொறியாளர் அன்புச்செல்வம், உதவி செயற்பொறியாளர்கள் முருகேசன், சந்திரமோகன், நீர்வளத்துறை அலுவலர்கள் வைகை அணையில் இருந்து மேல் மதகுகள் வழியாக வினாடிக்கு 3000 கன அடி வீதம் நீரை திறந்து விட்டனர்.
மூன்று முறை அபாய சங்கு ஒலிக்கப்பட்டது. காலை 11:00 மணிக்கு வினாடிக்கு 500 கன அடியும், 11:30 மணிக்கு 1550 கன அடியும், மதியம் 12:00 மணிக்கு வினாடிக்கு 3000 கன அடியாகவும் நீர் படிப்படியாக உயர்த்தப்பட்டு வெளியேறியது. 69 கன அடி நீர் வழக்கம்போல் குடிநீருக்காக வெளியேற்றப்படுகிறது.
மேல் மதகுகள் வழியாக வெளியேறிய நீர் தரைப் பாலத்தை மூழ்கடித்து சென்றதால் சுற்றுலாப் பயணிகள் அவ்வழியை பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை.
நீர்வளத்துறையினர் கூறியதாவது: சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட வைகை பூர்வீக பாசனப்பகுதி 3ல் உள்ள நிலங்களுக்கு நவ., 10 முதல் 18 வரை 9 நாட்களுக்கு 1830 மில்லியன் கன அடியும், பூர்வீக பாசனப்பகுதி 1ல் உள்ள நிலங்களுக்கு நவ., 20 முதல் 29 வரை 10 நாட்களுக்கு 418 மில்லியன் கன அடியும், வைகை பூர்வீக பாசனப்பகுதி 2ல் உள்ள நிலங்களுக்கு டிச., 1 முதல் 8 வரை 8 நாட்களுக்கு 752 மில்லியன் கன அடி நீரும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வைகை அணையில் இருந்து திறக்கப்படும் நீரானது தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களை கடந்து செல்ல இருப்பதால் கரையோர பொது மக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.
அணையின் நீர்மட்டம் நேற்று 64.96 அடி(அணை மொத்த உயரம் 71 அடி). நீர் வரத்து வினாடிக்கு 1309 கன அடியாக இருந்தது.