சிவகாசி டு கோவில்பட்டி: ஒரே உரிமத்தில் தீப்பெட்டி மூலப்பொருள் எடுத்துச்செல்ல ஏற்பாடு
சிவகாசி டு கோவில்பட்டி: ஒரே உரிமத்தில் தீப்பெட்டி மூலப்பொருள் எடுத்துச்செல்ல ஏற்பாடு
ADDED : பிப் 17, 2025 04:24 AM

சிவகாசி: 'பட்டாசு, தீப்பெட்டி தொழிலுக்கு தமிழக அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும்' என, சிவகாசியில் நடந்த தீப்பெட்டி தொழில் நுாற்றாண்டு விழாவில் அமைச்சர்கள் தெரிவித்தனர்.
சிவகாசியில் அகில இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம், தமிழ்நாடு அனைத்து தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கங்கள் சார்பில், தீப்பெட்டி தொழில் நுாற்றாண்டு விழா நடந்தது.
விழா மலர்
விழாக்குழு தலைவர் மகேஸ்வரன் தலைமை வகித்தார். சங்க தலைவர் விஜய ஆனந்த் வரவேற்றார். அசோகன் எம்.எல்.ஏ., மேயர் சங்கீதா, கலெக்டர் ஜெயசீலன், எஸ்.பி., கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர். தீப்பெட்டி தொழில் நுாற்றாண்டு விழா மலரை, அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு வெளியிட்டனர்.
அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது:
பொறியியல் படிப்பு படித்தவர்கள் கூட வேலை தேடி வரும் நிலையில், படிப்பறிவு இல்லாதவர்களுக்கும் 100 ஆண்டுகளாக தொடர்ந்து வாழ்க்கை கொடுத்து வருவது தீப்பெட்டி, பட்டாசு தொழில் தான்.
தி.மு.க., ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், எப்போதும் தீப்பெட்டி தொழிலுக்கு உதவியாக இருக்கும்.
கோவில்பட்டியில் உள்ள தீப்பெட்டி ஆலைகளுக்கு தேவையான மூலப்பொருட்களை சிவகாசி, சாத்துாரில் இருந்து எடுத்துச் செல்லும் போது, இரு மாவட்டங்களிலும் அனுமதி பெறுவதில் சிக்கல் நிலவுகிறது.
விருதுநகர், துாத்துக்குடி மாவட்டங்களுக்கு, ஒரே உரிமத்தில் மூலப்பொருட்களை கொண்டு செல்ல அனுமதி வழங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மண்ணுக்கு பெருமை
அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:
தீப்பெட்டி, பட்டாசு என்றாலே, சிவகாசி என உலகம் முழுதும் பரவி இருப்பது, நம் மண்ணுக்கு கிடைத்த பெருமை. இந்த தொழில்கள், வானம் பார்த்த பூமியான சிவகாசியில் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகின்றன.
நம் மண்ணுக்கு வெயில் அளித்த கொடை பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழில். இவற்றுக்கு, தமிழக அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும்.
பட்டாசுக்கும், தீக்குச்சிக்கும் இருக்கும் நெருக்கம் போல், என் ஆதரவு இந்த தொழில்களுக்கு இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அகில இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க செயலர் நுார் முகமது, பொருளாளர் நாகராஜன், கோவில்பட்டி தீப்பெட்டி தயாரிப்பாளர் சங்க தலைவர் பரமசிவம், சாத்துார் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் லட்சுமணன்.
தொழிலதிபர்கள் செல்வராஜன், ஆசைதம்பி, ராஜரத்தினம், செல்வ சண்முகம், சுரேந்திர சிவானி, பல்வேறு தீப்பெட்டி தொழிற்சாலை சங்க நிர்வாகிகள், உரிமையாளர்கள் பங்கேற்றனர்.

