ADDED : மார் 25, 2024 07:21 AM

கடந்த சில நாட்களாகவே தேர்தல் கண்காணிப்பு பறக்கும் படை,ஏகப்பட்ட பணத்தையும் நகைகளையும் பிடித்து வருகின்றனர். வழக்கமாக, தேர்தல் நேரத்தில் சில லட்சங்கள் பிடிபட்டன என்று செய்திகள் வரும், அவ்வப்போது கோடி ரூபாய்க்கு மேல் பிடிபட்ட சம்பவங்கள் நடக்கும். இந்த தேர்தலில், கோடிகளில் பிடிபடுவது மிகவும் சாதாரணமாக இருக்கிறது. கடந்த மூன்று நாளில் மட்டும், ராசிபுரத்தில் ரூ.6.20 கோடி மதிப்புள்ள, 29 கிலோ தங்கம், சென்னை தி.நகரில், 8 கிலோ தங்கம், ஸ்ரீவில்லிபுத்துாரில், 6.30 கிலோ தங்கம் என, ரூ.12 கோடி மதிப்பிலான பொருட்களும், ரொக்கமும் தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
பண மதிப்பிழப்பு, டிஜிட்டல் இந்தியா, 2,000 ரூபாய் நோட்டு ரத்து எல்லாவற்றுக்கு பிறகும் இவ்வளவு பிடிபடுவது, தேர்தல் ஆணையத்தை கவலையில் ஆழ்த்தி உள்ளது. மத்திய அரசின் உளவுத்துறையும் இதை கவனித்து வருகிறது.
சமீபத்தில், ஐ.பி., தமிழக கள நிலவரம் பற்றி மத்திய உள்துறைக்கு தகவல் அனுப்பியது. அதன்படி, பா.ஜ., கூட்டணிக்கு இரண்டே தொகுதிகளில் தான் சாதகமான நிலை இருப்பதாக தெரிவித்து உள்ளது. ஒன்று, சவுமியா அன்புமணி போட்டியிடும் தர்மபுரி தொகுதி, மற்றொன்று ஏ.சி.சண்முகம் போட்டியிடும் வேலுார் தொகுதி.

