அரசு பள்ளி மாணவருக்கு 'திறன்' திட்டம்; உதவிபெறும் பள்ளிகளுக்கும் வேண்டும்: ஆசிரியர்கள் போர்க்கொடி
அரசு பள்ளி மாணவருக்கு 'திறன்' திட்டம்; உதவிபெறும் பள்ளிகளுக்கும் வேண்டும்: ஆசிரியர்கள் போர்க்கொடி
ADDED : மே 16, 2025 06:24 AM

மதுரை : 'அரசு பள்ளி மாணவர்களுக்கான 'திறன்' என்ற மொழித்திறன், கணிதத் திறன்களை மேம்படுத்தும் பயிற்சி திட்டத்தை அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் நீட்டிக்க வேண்டும்' என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அரசு பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் மொழித் திறன், கணிதத் திறன்களை மேம்படுத்துவதற்காக இந்தாண்டு முதல் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான மாநில அளவிலான கருத்தாளர்களுக்கான பயிற்சியை மாநில கல்வி ஆராய்ச்சி நிறுவனம் (டயட்) துவங்கியுள்ளது. இதில் டயட் விரிவுரையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் பங்கேற்று வருகின்றனர். மொழித்திறன்களை மேம்படுத்தும் இத்திட்டத்தை அரசு உதவிபெறும் மாணவர்களுக்கும் நீட்டிக்க வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகள் ஆசிரியர் அலுவலர்கள் கூட்டமைப்பு மாவட்ட பொறுப்பாளர் தனபால் கூறியதாவது: அரசு புதிதாக கொண்டுவரும் திட்டங்களில் உதவிபெறும் மாணவர்களை சேர்ப்பதில்லை. குறிப்பாக மருத்துவ படிப்புக்கான 7.5 சதவீதம் சிறப்பு ஒதுக்கீட்டில் கேட்டு போராடுகிறோம். உதவிபெறும் மாணவருக்கு தனியாகவே 2.5 சதவீதம் கேட்கிறோம். ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை. இதுபோல் கலை இலக்கிய போட்டிகள், 100 சதவீதம் பெறும் பள்ளிகள், மாணவர்கள், ஆசிரியர்களுக்கான பாராட்டு என எதிலும் உதவிபெறும் பள்ளிகளை சேர்ப்பதில்லை. இந்த எண்ணத்தில், மாணவர்கள் நலன் கருதி தமிழக அரசுக்கு மாற்றம் வேண்டும் என்றார்.