ADDED : அக் 05, 2024 07:13 AM
சென்னை : தயாரிப்பு பணி முடிந்துள்ள நிலையில், முதல், 'சிலீப்பர் வந்தே பாரத்' ரயில், பெங்களூரில் இருந்து நேற்று சென்னை ஐ.சி.எப்., ஆலைக்கு வந்தது. அங்கு பல கட்ட சோதனைகள் நடத்தப்பட உள்ளன.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பி.இ.எம்.எல்., நிறுவனத்தில், முதல் சிலீப்பர் வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணிகள், கடந்த ஆண்டு துவங்கின.
பணிகள் முடிந்ததால், இந்த ரயிலில், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், கடந்த மாதம் ஆய்வு மேற்கொண்டார்.
இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: சிலீப்பர் வந்தே பாரத் ரயில், பயணியரை வெகுவாக கவரும் வகையில் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த ரயில், சென்னை ஐ.சி.எப்., ஆலைக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. ரயில்வே வாரிய அதிகாரிகள், ஐ.சி.எப்., தொழில்நுட்ப அதிகாரிகள் பார்வையிட்டனர்.
இதையடுத்து, இங்குள்ள ரயில் பாதையில் இயக்கி, பல்வேறு கட்ட ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். அதன்பின், மணிக்கு 180 கி.மீ., வரை வேகமாக இயக்கி, சோதனை ஓட்டம் நடத்தப்படும்.
இந்த ரயிலின் இயக்கம், பாதுகாப்பு அம்சங்கள், தொழில்நுட்ப திறன், பயணியர் வசதிகள் குறித்து அறிக்கை, ரயில்வே பாதுகாப்பு ஆணையருக்கு அனுப்பப்பட்டு, உரிய ஒப்புதல் பெறப்படும். எந்த வழித்தடத்தில் இயக்குவது என்பது குறித்து, ரயில்வே வாரியம் இறுதி செய்து அறிவிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.