ADDED : அக் 21, 2025 08:55 AM

மயிலாடுதுறை: குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் விடிய விடிய தொடர் மழை பெய்தது. ஆயிரக்கணக்கான ஏக்கரில் இளம் சம்பா நாற்றுகள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தென்மேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று இரவு துவங்கி விடிய விடிய பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இன்று காலை 6:30 மணி நிலவரப்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகபட்சமாக சீர்காழியில் 65.80 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
இதேபோல் மயிலாடுதுறையில் 58.20 மி.மீ., மணல்மேடு 36 கொள்ளிடம் 46 செம்பனார்கோயில் 53 தரங்கம்பாடி 20.90 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
மாவட்டத்தில் சராசரியாக 46.65 மி.மீ. அளவு மழை பதிவாகியுள்ள நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
தற்பொழுது மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா சாகுபடி பணிகளுக்காக நடவுப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், செம்பனார்கோவில், மயிலாடுதுறை, மணல்மேடு, சீர்காழி பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சம்பா இளம் நாற்றுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.