பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டும் இடமாக மாறிய ஸ்மார்ட் சிட்டி ஏரிகள்
பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டும் இடமாக மாறிய ஸ்மார்ட் சிட்டி ஏரிகள்
ADDED : நவ 30, 2024 02:51 AM
சென்னை:கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஏரிகள், பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டும் இடமாக மாறியிருப்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு, மத்திய, மாநில அரசுகளுக்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ஏரிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இந்த ஏரிகளை சுற்றியுள்ள ஹோட்டல்கள், வணிக வளாகங்களில் இருந்து குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள், உணவை பேக்கிங் செய்யும் பிளாஸ்டிக் பொருட்கள், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தட்டுகள், டம்ளர்கள் உள்ளிட்ட பிளால்டிக் கழிவுகள் ஏரிகளுக்குள் கொட்டப்படுகின்றன.
இதனால், சுகாதார பிரச்னைகள் ஏற்பட்டு, அருகில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படுவதாக நாளிதழ்களில் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கு பதிந்த, டில்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு, இந்த வழக்கை சென்னையில் உள்ள தென் மண்டல அமர்வுக்கு மாற்றியது.
அதைத்தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர், 'கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஏரிகள், பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படும் இடமாக மாறியது குறித்து, மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள், கோவை மாநகராட்சி, கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டு, வழக்கின் அடுத்த விசாரணையை, ஜனவரி 28ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.