பாங்காக்கில் இருந்து ரூ.23.5 கோடி கடத்தல் கஞ்சா சிக்கியது: பெண் உட்பட மூவர் கைது
பாங்காக்கில் இருந்து ரூ.23.5 கோடி கடத்தல் கஞ்சா சிக்கியது: பெண் உட்பட மூவர் கைது
ADDED : ஜன 30, 2025 03:00 AM

சென்னை: தாய்லாந்தில் இருந்து விமானத்தில் கடத்தப்பட்டு வந்த, 23.5 கோடி ரூபாய் மதிப்பிலான, 24.48 கிலோ கஞ்சாவை, விமான நிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கடந்த சில மாதங்களாகவே, தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு, போதை பொருட்கள் கடத்தி வரும் சம்பவங்கள், அதிகரித்து வருகின்றன.
கடந்த 26ல், தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு உயர்ரக கஞ்சா கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
தனிப்படை அமைத்த அதிகாரிகள், சென்னைக்கு தரையிறங்கும் விமானங்களை கண்காணித்து வந்தனர். அப்போது, தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து வந்திருந்த பயணியரின் உடைமைகளை, சோதனை செய்து வந்தனர்.
சுற்றுலா விசாவில் சென்று திரும்பிய பெண் மற்றும் இரு ஆண் பயணி மீது, அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. தடுத்து நிறுத்தி விசாரித்ததில், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளனர்.
அவர்கள் கொண்டு வந்திருந்த உடைமைகளை சோதித்து பார்த்ததில், பதப்படுத்தப்பட்ட பழங்கள் என்ற பெயரில், 24 பாக்கெட்டுகள் இருந்தன. அவற்றை பிரித்து பார்த்தபோது, உள்ளே உயர்ரக கஞ்சா கடத்தி இருந்தது தெரிய வந்தது.
அதன் எடை, 23.48 கிலோ; சர்வதேச மதிப்பு 23.5 கோடி ரூபாய். அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடத்தல் பயணியரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
கடத்தலுக்கு உதவிய ராயப்பேட்டையை சேர்ந்த நபர் குறித்தும், விசாரித்து வருகின்றனர்.