'பாம்பு குவியுதுங்க... ப்ளீஸ் வாங்க!' நாள் முழுக்க 'எங்கேஜ்' ஆன '101' நம்பர்
'பாம்பு குவியுதுங்க... ப்ளீஸ் வாங்க!' நாள் முழுக்க 'எங்கேஜ்' ஆன '101' நம்பர்
ADDED : அக் 17, 2024 02:49 AM

சென்னை:வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்த பாம்புகளை பிடிக்க நேற்று முன்தினம் மட்டும் 211 பேர் தீயணைப்பு துறை உதவியை நாடியுள்ளனர்.
வட கிழக்கு பருவமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட தாழ்வானப் பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. முன்னெச்சரிக்கையாக அப்பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
மழை வெள்ளத்தில் காட்டுப் பகுதிகளில் உள்ள பாம்பு புற்றுகளும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. அவற்றில் வாழும் பாம்புகள் போக்கிடம் தெரியாமல் வெள்ள நீரில் அடித்து வரப்பட்டு அருகில் உள்ள குடியிருப்புகளில் புகும் நிலை ஏற்பட்டுள்ளது.
அப்படி வீடு தேடி பாம்புகளும் வரலாம் என்பதையும், அவற்றை பிடிக்க தங்களை எந்த நேரத்திலும் கூப்பிடலாம் என்பதையும் முன்கூட்டியே வனத் துறையும், தீயணைப்பு துறையும் சொல்லியிருந்தன.
அதன்படி நேற்று முன்தினம் மட்டும் மாநிலம் முழுதும், வீடுகளுக்குள் புகுந்த பாம்புகளை பிடிக்க வருமாறு தீயணைப்பு துறையை '101' கட்டணமில்லா தொடர்பு எண் வாயிலாக 211 பேர் அழைத்துள்ளனர்.
இதுகுறித்து, தீயணைப்பு வீரர்கள் கூறியதாவது:
வீடுகளுக்குள் புகுந்த பாம்புகளை பிடிக்க வரும்படி நேற்று முன்தினம் மட்டும், மத்திய மண்டலம் 44; வடக்கு மண்டலம் 43; தெற்கு மண்டலம் 31; மேற்கு மண்டலம் 29; வடமேற்கு மண்டலம் 25; நெல்லை மண்டலம் 21; சேலம் மண்டலம் 18 என, மொத்தம் 211 அழைப்புகள் வந்தன. அந்த வீடுகளுக்கு பாம்பு பிடிப்பவர்களுடன் சென்று பாம்புகளை பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்துள்ளோம்.
இதில் தாம்பரம் அடுத்த பொழிச்சலுாரில் ஆறுமுகம் என்பவர் வீட்டில் புகுந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிக்கப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.