'சமூக ஆர்வலர்கள் கொலை அதிகரிப்பு கேள்வி கேட்டால் மிரட்டப்படுகின்றனர்': சீமான்
'சமூக ஆர்வலர்கள் கொலை அதிகரிப்பு கேள்வி கேட்டால் மிரட்டப்படுகின்றனர்': சீமான்
ADDED : பிப் 16, 2025 01:33 AM

சென்னை: 'தி.மு.க., ஆட்சியில் சமூக ஆர்வலர்கள், கொலை செய்யப்படுவது அதிகரித்துள்ளது. கேள்வி கேட்டாலே மிரட்டப்படுகின்றனர்' என, நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
மயிலாடுதுறையில், இரண்டு இளைஞர்களை, கள்ளச்சாராய கும்பல் படுகொலை செய்துள்ளது. சாராய விற்பனை குறித்து, பலமுறை புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்க தவறிய, காவல் துறையின் அலட்சியத்தால், இருவர் இறந்துள்ளனர்.
தமிழகத்தில் ஆட்சியாளர்கள் இழைக்கும் அநீதிக்கு எதிராகவும், தினமும் நடக்கும் சமூக அவலங்களுக்கு எதிராகவும், கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்கதையாகி விட்டது. சில நாட்களுக்கு முன்பு, அரசு மருத்துவமனையில் டாக்டர் இல்லை எனக்கூறிய நடிகர் கஞ்சா கருப்பு மிரட்டப்படுகிறார்.
தி.மு.க., ஆட்சியில், கள்ளச்சாராய விற்பனையிலும், கட்டுக்கடங்காத கஞ்சா புழக்கத்திலும், டாஸ்மாக் மது விற்பனையிலும், தமிழகம் முதன்மை மாநிலமாக நிற்கிறது. இதனால், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடக்காதே நாட்களே இல்லை என்ற அளவிற்கு, குழந்தைகள், பெண்கள், டாக்டர்கள், வழக்கறிஞர்கள், அரசு பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பற்ற சூழலில் உள்ளனர்.
இதில், மயிலாடுதுறையில் இருவர் படுகொலை செய்யப்பட்டதற்கு, முன்விரோதம் காரணம் என, போலீசார் விளக்கம் அளிப்பது வியப்பளிக்கிறது. முன் விரோதம் ஏற்படக் காரணம் சாராய விற்பனைதானே. அரசிற்கு அவப்பெயர் ஏற்படாமல் தடுக்க வேண்டும் எனப் போலீசார் நினைத்தால், குற்றத்தை தடுக்க முனைய வேண்டும். குற்றம் நடந்ததற்கான காரணத்தை மறைக்க முயலக்கூடாது. இனியாவது கள்ளச்சாராய விற்பனையை போலீசார் தடுத்து நிறுத்த முன்வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.