ADDED : ஏப் 21, 2025 05:22 AM

திருச்சி : திருச்சி பஞ்சப்பூரில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணிக்கு எனக்கூறி, குளங்களில் இருந்து மண் எடுக்கப்படுவதாக விவசாய சங்கத்தினர் குற்றஞ்சாட்டினர். மண் எடுப்பதை கண்காணிக்க, மாவட்ட நிர்வாகம் அதிகாரிகளை நியமித்துள்ளது.
திருச்சி மாவட்டம் அளுந்துார் கிராமத்தில், 25 ஏக்கரில் அமைந்த பெரியகுளம், அதை ஒட்டிய இரண்டு சிறிய குளங்கள், மணிகண்டம் ஒன்றியத்திற்கு உட்பட்ட விவசாய நிலங்களுக்கு பாசன வசதி தருகின்றன.
திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் புதிய ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் பணிக்காக, அளுந்துாரில் உள்ள பெரியகுளம் மட்டுமின்றி, மற்ற இரண்டு குளங்களிலும் கிராவல் மண் எடுக்கப்பட்டது.
பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணி துவங்கிய காலத்தில் இருந்து மண் எடுக்கப்பட்டது. தற்போது, பணிகள் நிறைவடையும் தருவாயில் இருக்கின்றன. இருந்தும், 20க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளில், அதிக அளவில் மண் எடுக்கப்படுகிறது.
அரசு அனுமதித்த அளவை விட அதிகமாக கிராவல் மண் மற்றும் செம்மண் எடுக்கப்படுவதாகவும், அந்த மண், பஸ் ஸ்டாண்ட் பணியை தவிர, வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் கூறி, அளுந்துார் கிராம மக்கள் மண் அள்ளிய லாரிகளை தடுத்து நிறுத்தினர்.
மணப்பாறை தி.மு.க., ஒன்றிய செயலர் ஆரோக்கியசாமி ஆதரவாளர்கள், கிராம மக்களை மிரட்டி, லாரிகளை விடுவித்துச் சென்றுள்ளனர். இதனால், மாவட்ட நிர்வாகத்துக்கு விவசாய சங்கத்தினர் புகார் தெரிவித்தனர்.
தமிழ்நாடு விவசாய சங்க நிர்வாகிகள் கூறியதாவது: பஸ் ஸ்டாண்ட் பணிக்கு, குளங்களில் இருந்து மண் எடுப்பதை தடுக்கவில்லை. அரசு அனுமதித்த அளவை விட அதிகமாக, குளங்களில் இருந்து கிராவல் மற்றும் செம்மண்ணை லாரிகளில் அள்ளி, வேறு இடங்களுக்கு விற்பனை செய்கின்றனர்.
இதனால், அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பெரியகுளத்தில் ஒரே சீராக மண் எடுக்காமல், பல இடங்களில் மிகப்பெரிய பள்ளங்கள் தோண்டி உள்ளனர்.
இதனால், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதோடு, குளத்தில் தேங்கும் நீரை பாசனத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். பஸ் ஸ்டாண்ட் பணிக்கு என்று கூறி, குளத்து மண்ணை தோண்டி விற்பனை செய்த தி.மு.க., பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
புகாரை தொடர்ந்து, பெரியகுளம் மற்றும் அதன் அருகே உள்ள இரண்டு குளங்களில் எடுக்கப்படும் மண், பஸ் ஸ்டாண்டுக்கு கொண்டு செல்வதை கண்காணிக்க, மாவட்ட நிர்வாக தரப்பில், அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.