ஆதாரமின்றி மண் கடத்தல் வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி
ஆதாரமின்றி மண் கடத்தல் வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி
ADDED : மார் 19, 2024 11:09 PM
மதுரை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே சட்டவிரோதமாக மண்ணை திருடி வாகனங்களில் கொண்டு சென்றதாக ஆதாரமின்றி தாக்கல் செய்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
திருப்புவனம் புதுார் சின்னமாரி தாக்கல் செய்த பொதுநல மனு:திருப்புவனம் அருகே பாப்பாகுடியில் ரயத்துவாரி சர்வே எண்கள் மற்றும் அருகிலுள்ள விவசாய நிலத்தில் சிலர் சட்டவிரோதமாக வணிக நோக்கில் சவடு மண் அள்ளுகின்றனர். அரசிடம் அனுமதி பெறவில்லை. தாலுகா, மாவட்ட உயர்நிலைக்குழு அலுவலர்கள் தடுப்பு நடவடிக்கை எடுக்கவில்லை.
மண் அள்ளி வாகனங்களில் கொண்டு சென்றதற்கு ஆதாரமாக திருப்பாச்சேத்தி (ராமேஸ்வரம்-மதுரை ரோடு) டோல்கேட்டில் கண்காணிப்பு கேமரா பதிவுகள் உள்ளன. அவற்றை பாதுகாக்க வேண்டும். மண் அள்ள தடை விதிக்க வேண்டும். சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு: டோல்கேட் கண்காணிப்பு கேமராவில் ஜன.,23 முதல் பிப்.,12 வரை சட்டவிரோதமாக மண் அள்ளிச்சென்ற வாகனங்கள் தொடர்பான பதிவுகளை கலெக்டர் தலைமையிலான மாவட்ட உயர்நிலைக்குழு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என ஏற்கனவே இந்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆய்வு செய்ததில் மனுதாரர் குறிப்பிடுவதுபோல் சட்டவிரோதமாக வாகனங்களில் மண் கொண்டு சென்றதற்கு ஆதாரமான பதிவுகள் இல்லை. மனுதாரர் போதிய ஆதாரங்களுடன் மனு தாக்கல் செய்யவில்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.

