நாட்டிலேயே முதல் முறையாக ரயில் பாதையில் 'சோலார் பேனல்'
நாட்டிலேயே முதல் முறையாக ரயில் பாதையில் 'சோலார் பேனல்'
ADDED : ஆக 19, 2025 06:38 AM

சென்னை : நாட்டிலேயே முதல் முறையாக வாரணாசி ரயில் பாதையில், 70 மீட்டர் துாரம், 'சோலார் பேனல்' நிறுவி, மின்சாரம் உற்பத்தி செய்யும் புதிய முயற்சியை ரயில்வே துறை துவங்கி உள்ளது.
ரயில்வே, தனக்கு சொந்தமான இடங்களில் சூரியசக்தி, காற்றாலைகளை நிறுவி, மின் உற்பத்தி செய்து பயன்படுத்தி வருகிறது. குறிப்பாக, ரயில் நிலையங்களின் மேற்கூரைகளில் தனியார் பங்களிப்போடு சோலார் பேனல் நிறுவி, மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
அடுத்த கட்டமாக ரயில் பாதைகளிலும் சோலார் பேனல் நிறுவி, சூரியசக்தி மின்சாரம் தயாரித்து பயன்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது.
அதன்படி, நாட்டிலேயே முதல் முறையாக, உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள பனாரஸ் ரயில்வே, 'கோமோமோட்டிவ் ஒர்க்ஸ்' சார்பில், 70 மீட்டர் துாரத்துக்கு, 28 சோலார் பேனல் அமைக்கப்பட்டு உள்ளது.
இதிலிருந்து, 15 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கப்பட உள்ளது. தேவைக்கேற்ப அகற்றவும், மாற்றவும் கூடிய வகையில் இது வடிவமைக்கப்பட்டு உள்ளது.