UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 07:19 PM
– நமது நிருபர் –-: மத்திய அரசின் மானியத்தில் வீடுகளில் ’சோலார்’ எனப்படும், சூரிய ஒளி மின்சார இணைப்பு பெறும் திட்டத்தில், தமிழகத்தில் கோவை முதலிடத்தில் உள்ளது.
வீடுகளில் சோலார் திட்டத்தை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு கடந்த 2024ம் ஆண்டு மானிய திட்டத்தை அறிவித்தது. 3 கிலோ வாட் மின் உற்பத்திக்கு மத்திய அரசு ரூ.78,000 மானியம் வழங்குகிறது.
கடந்த தி.மு.க ஆட்சி இத்திட்டத்தை மக்களிடம் கொண்டு செல்லவில்லை. த.வெ.க. ஆட்சிக்கு வந்த பிறகு இத்திட்டத்தில் மாநில அரசு ரூ.22,000 மானியம் வழங்கும் என அறிவித்தனர். கடந்த 19ம் தேதி இத்திட்டம் துவங்கப்பட்டது. தற்போது வரை 16,500 பேர் புதிதாக பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு சோலார் அசோசியேஷன் தலைவர் கந்தசாமி கூறியதாவது:
மத்திய அரசு திட்டம் என்பதால் தி.மு.க., ஆட்சியில் இத்திட்டத்தை முடக்கினர். சோலார் நிறுவுவதில் நாட்டிலேயே தமிழகம் ஏழாவது இடத்தில் இருந்து, 13வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
த.வெ.க. அரசு மானியம் அறிவித்திருப்பது மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இத்திட்டத்தில் இதுவரை ஒரு லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். தமிழகத்திலேயே அதிகபட்சமாக கோவையில் 10,000 பேர் பயனடைந்துள்ளனர்.
வரும் 2027 மார்ச் 31ம் தேதியுடன் திட்டத்தை நிறுத்த போவதாக மத்திய அரசு கூறியுள்ளது. திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும். 2 லட்சம் பேருக்கு திட்டத்தை கொண்டு சேர்க்க தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கு வங்கிகளில் உடனடியாக கடன் கிடைக்கும். முதல்வர் விஜயின் நடவடிக்கையை பாராட்டுகிறோம். registration.pmsuryaghar.gov.in , www.pmsuryaghar.gov.in ஆகிய தளங்களில் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
