மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு; கச்சத்தீவு மீட்க நடவடிக்கை பிரதமரை வலியுறுத்தி சட்டசபையில் நிறைவேறிய தீர்மானம்
மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு; கச்சத்தீவு மீட்க நடவடிக்கை பிரதமரை வலியுறுத்தி சட்டசபையில் நிறைவேறிய தீர்மானம்
UPDATED : ஏப் 03, 2025 03:10 AM
ADDED : ஏப் 03, 2025 12:26 AM
சென்னை:இலங்கை செல்லும் பிரதமர் மோடி, தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு
காணவும், கச்சத்தீவை மீட்பது குறித்து பேச்சு நடத்தவும் வலியுறுத்தி,
சட்டசபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுதொடர்பாக, அரசின் தனி தீர்மானத்தை கொண்டு வந்து, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
மத்தியில்
பா.ஜ., ஆட்சி அமைந்தால், ஒரு மீனவர் கூட கைது செய்யப்படமாட்டார்கள் என
2014 லோக்சபா தேர்தலுக்கு முன்பாக, பிரதமர் நரேந்திர மோடி சொன்னார்.
இந்த
தாக்குதல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இலங்கையில் சில மாதங்களுக்கு
முன்னால், ஆட்சி மாற்றம் நடந்தது. ஏற்கனவே இருந்தவர்கள் தோல்வி அடைந்து,
புதியவர்கள் ஆட்சிக்கு வந்திருக்கின்றனர். ஆனாலும், தமிழக மீனவர்கள் நிலைமை
மாறவில்லை. மீனவர்கள் மீதான தாக்குதல்கள் ஓயவில்லை.
பாரம்பரிய
மீன்பிடி உரிமை கொண்ட நம் மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுகின்றனர்.
படகுகள் இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. லோக்சபாவில்,
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், 97 இந்திய மீனவர்கள், இலங்கை
சிறையில் இருப்பதாக புள்ளிவிவரத்தை கொடுத்திருக்கிறார். அதில், 11 பேரை,
கடந்த மாதம் 27ம் தேதி இலங்கை கடற்படை கைது செய்திருக்கிறது. கடந்த 2024ல்
மட்டும், 530 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு
இருக்கின்றனர்.
இதை மத்திய பா.ஜ., அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பது சவாலாக இருப்பதாக, மத்திய அமைச்சர்
ஜெய்சங்கர் கூறியுள்ளார். இதில் என்ன சவால் இருக்க முடியும் என்று
தெரியவில்லை.
வேறொரு மாநில மீனவர்கள், இப்படி தொடர் தாக்குதலுக்கு
உள்ளானால், இப்படித்தான் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பரா? தமிழக
மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து, தமிழக அரசின் சார்பில் நான் தொடர்ந்து
கடிதம் எழுதிக்கொண்டு வருகிறேன். இதுவரைக்கும், 74 கடிதங்களை மத்திய
வெளியுறவு அமைச்சருக்கும், பிரதமர் மோடிக்கும் எழுதி
தொடர்ச்சி ௭ம் பக்கம்மீனவர்கள் பிரச்னைக்கு...முதல் பக்க தொடர்ச்சி
இருக்கிறேன். பிரதமரை நேரில் சந்திக்கும்போதெல்லாம், இதுகுறித்து வலியுறுத்தி இருக்கிறேன்.
கச்சத்தீவை
பொறுத்தவரை, மாநில அரசுதான் அதை இலங்கைக்கு அளித்ததுபோன்ற ஒரு தவறான தகவலை
பரப்பி அரசியல் செய்வது, அரசியல் கட்சிகளுக்கு வழக்கமாகி விட்டது. ஆனால்,
அரசியல் ஆதாயத்திற்காக கட்சிகள் செய்யும் அதே தவறை, மத்திய அரசு செய்வது
வருந்தத்தக்கது; ஏற்க முடியாதது. கச்சத்தீவை கொடுத்து ஒப்பந்தம் போட்டபோதே,
முதல்வராக இருந்த கருணாநிதி அதை கடுமையாக எதிர்த்தார்.
கச்சத்தீவை
மீட்கவும், அங்கு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்டவும்
பல்வேறு முயற்சிகளை, தி.மு.க., அரசு எடுத்து வருகிறது. விரைவில் இலங்கை
செல்லும் பிரதமர், தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணவும்,
கச்சத்தீவை மீட்கும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைக்கு பேச்சு நடத்தவும்
வேண்டும் என, சட்டசபை விரும்புகிறது.
இதை அடிப்படையாக வைத்து,
தீர்மானத்தை முன்மொழிகிறேன். தமிழகத்தை சேர்ந்த இந்திய மீனவர்களின் நலன்
கருதி, அனைத்து கட்சிகளும் இந்த தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றி தர
வேண்டும்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.
இதைதொடர்ந்து,
அ.தி.மு.க., - பழனிசாமி, காங்கிரஸ் - செல்வப்பெருந்தகை, பா.ஜ., - வானதி,
பா.ம.க., - ஜி.கே.மணி, ம.தி.மு.க., - சதன் திருமலைகுமார், இந்திய கம்யூ., -
ராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூ., - நாகை மாலி, வி.சி.க., -
எஸ்.எஸ்.பாலாஜி, த.வா.க., - வேல்முருகன், கொ.ம.தே.க., - ஈஸ்வரன், ம.ம.க., -
அப்துல் சமது, புரட்சி பாரதம் - ஜெகன் மூர்த்தி ஆகியோர் தீர்மானத்தை
ஆதரித்து பேசினார்.
அப்போது, ஜெயலலிதா தொடர்பாக செல்வப்பெருந்தகை
பேசியதால் சலசலப்பு எழுந்தது. அதை சபை குறிப்பில் இருந்து நீக்க,
அ.தி.மு.க., தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்த எதிர்ப்பை,
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பதிவு செய்தார்.
இதை தொடர்ந்து பேசிய
முதல்வர் ஸ்டாலின், தீர்மானத்தை எவ்வித சலசலப்பும் இன்றி ஒருமனதாக
நிறைவேற்ற, அனைவரும் ஒத்துழைப்பு தரும்படி வலியுறுத்தினார். இரு தரப்பிலும்
பேசிய கருத்துக்களை சபை குறிப்பில் இருந்து நீக்குமாறு கூறினார்.
இதையடுத்து, குரல் ஒட்டெடுப்பு வாயிலாக, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.