கடவுளை வழிபடுவோர் உணர்வுகளை காலால் மிதித்தார் ஒருவர்: கவர்னர் ரவி ஆவேசம்
கடவுளை வழிபடுவோர் உணர்வுகளை காலால் மிதித்தார் ஒருவர்: கவர்னர் ரவி ஆவேசம்
ADDED : ஏப் 13, 2025 03:06 AM

மதுரை: ''தமிழக ஆளுங்கட்சியைச் சேர்ந்த உயர் பதவியில் உள்ள ஒருவர், பெண்களை தரக்குறைவாகப் பேசியது கண்டனத்துக்குரியது. சிவன், விஷ்ணு, நாராயணனை வழிபடுவோரின் உணர்வுகளை காலில் போட்டு மிதித்துள்ளார்.
''வேறுவழியின்றி அவரை 'ஜென்டில்மேன்' என மரியாதையாக அழைக்கும் கட்டாயத்தில் உள்ளேன்,'' என தமிழக கவர்னர் ரவி பேசினார்.
'கல்விக்கூடங்களில் கம்பர்' என்ற தலைப்பில் மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் நடந்தது.
பரிசுகளை வழங்கி கவர்னர் ரவி பேசியதாவது:
வடமாநிலங்களில் துளசிதாசர் ராமாயணம் பற்றி வீதிகள் தோறும் பேசப்படுகிறது. அதை ஆராய்ச்சி செய்து 1000 பேர் பிஎச்.டி., பட்டம் பெற்றுள்ளனர்.
தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் கம்பராமாயணம் ஒலித்துக் கொண்டிருக்கும் என முதலில் எதிர்பார்த்தேன். இங்கு வேறுபட்ட நிலை இருந்ததால் ஏமாற்றமடைந்தேன். இங்குள்ள பல்கலைகளில் கம்பர் பற்றி தனியாக படிக்க இருக்கை ஏற்படுத்தவில்லை. இது பெரும் ஏமாற்றமளிக்கிறது.
தமிழின் பெரும் அடையாளம், மாபெரும் ஆளுமையின் நினைவுகளை அகற்றினால் நம் மொழி, ஆன்மிகம், கலாசாரத்திற்கு நன்மை ஏற்படாது. மனிதன் எப்படி வாழ வேண்டும் என கம்பராமாயணம் கூறுகிறது. அதில் பெண்களின் கண்ணியம் போற்றப்படுகிறது.
சீதையை ராவணன் கவர்ந்து சென்றதை கம்பன் கண்ணியமாக எழுதியிருப்பார். சில தினங்களுக்கு முன்பு தமிழக ஆளுங்கட்சியைச் சேர்ந்த உயர்பதவியில் உள்ள ஒருவர் பெண்களை தரக்குறைவாக பேசியுள்ளார்.
அது கண்டனத்துக்குஉரியது. கம்பன் காட்டிய பாதை அழிக்கப்பட்டு வருவதாக அச்சப்படும் சூழல் நிலவுகிறது.
வேறுவழியின்றி அவரை 'ஜென்டில்மேன்' என மரியாதையாக அழைக்கும் கட்டாயத்தில் உள்ளேன். பெண்களின் கண்ணியத்திற்கு மட்டும் அவர் சேதம் விளைவிக்கவில்லை. சிவன், விஷ்ணு, நாராயணனை வழிபடுவோரின் உணர்வுகளை காலில் போட்டு மிதித்துள்ளார்.
இந்த ஜென்டில்மேன் ஒரு தனிநபர் அல்ல. தமிழகத்தில் 70 ஆண்டுகளாக ஒரு சூழல் அமைப்பு நிலவுகிறது.
அந்த சூழலின் ஒரு பகுதி அவர். நமது கடவுள்களுக்கு செருப்பு மாலை அணிவித்தனர். சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியாவுடன் ஒப்பிட்டு பேசினர். இங்கு அரசியல் ரீதியான கலாசார படுகொலை நிகழ்த்தப்படுகிறது.
ஆழ்வார்கள், நாயன்மார்கள் அருளிய கிராமங்கள் தோறும், பக்தி மணம் கமழும் இம்மண்ணில் கடவுள் வழிபாட்டை கொச்சைப்படுத்தி, புண்படுத்தும் செயல் அரங்கேறுகிறது.
இவ்வாறு பேசினார்.

