கோவையில் கஞ்சா வழக்கில் மகன் கைது: போலீஸ் ஸ்டேஷன் முன் தீக்குளித்த தந்தை பலி
கோவையில் கஞ்சா வழக்கில் மகன் கைது: போலீஸ் ஸ்டேஷன் முன் தீக்குளித்த தந்தை பலி
ADDED : பிப் 02, 2025 11:08 AM

கோவை: கஞ்சா வழக்கில் தனது மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்ததால், தந்தை போலீஸ் ஸ்டேஷன் முன் தீக்குளித்து, தற்கொலை செய்து கொண்டார்.
கோவை, கவுண்டம்பாளையம், சிவா நகரை சேர்ந்த மணி பாரத், 19. இவர் மீது, திருட்டு, அடிதடி, கஞ்சா விற்பனை போன்ற வழக்குகள் உள்ளன. மணி பாரத்தின் தந்தை ஆட்டோ ஓட்டுநர் சேகர், 45. இவர் கொலை வழக்கில் கைதாகி, சிறை சென்று வந்தவர்.
இந்நிலையில், கடந்த 31ம் தேதி கவுண்டம்பாளையம், அன்னை இந்திரா நகர் பொது கழிப்பிடம் அருகில் கஞ்சா விற்பனை செய்ததற்காக, மணி பாரத் மற்றும் அவரது நண்பர் ஜானகிராமன், 27 ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 108 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட இருவரையும், போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில், மணி பாரத்தின் தந்தை சேகர், நேற்று காலை கவுண்டம்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு, ஆட்டோவில் வந்தார்.
அவரது கையில் ஒரு சிறிய பாட்டிலில், மண்ணெண்ணெய் வைத்திருந்தார். ஆட்டோவில் இருந்து இறங்கிய அவர், ஸ்டேஷனை நோக்கி நடந்து சென்றவாறே தன் மீது, மண்ணெண்ணெயை ஊற்றி பற்ற வைத்தார்.
இதைப்பார்த்த போலீசார், பதறி ஓடிச்சென்று தீயை அணைத்தனர். 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். உடல் முழுவதும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சேகர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.