கல்லுாரி மாணவர்களுக்கு ரூ.20,000 மதிப்பில் 'லேப்டாப்'; தங்கம் தென்னரசு விளக்கம்
கல்லுாரி மாணவர்களுக்கு ரூ.20,000 மதிப்பில் 'லேப்டாப்'; தங்கம் தென்னரசு விளக்கம்
ADDED : மார் 22, 2025 01:02 AM

சட்டசபையில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - தங்கமணி: கல்லுாரி மாணவர்கள், 20 லட்சம் பேருக்கு, 'லேப்-டாப்' வழங்க பட்ஜெட்டில், 2,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த ஒதுக்கீட்டை கூட்டி, கழித்துப் பார்த்தால், ஒரு மாணவருக்கு, 10,000 ரூபாய் தான் வருகிறது. இந்த விலையில் தரமான, லேப்-டாப் வழங்க முடியுமா?
அமைச்சர் தங்கம் தென்னரசு: கல்லுாரி மாணவர்கள், 20 லட்சம் பேருக்கு, அடுத்த இரண்டு ஆண்டுகளில் லேப்-டாப் வழங்கப்படும் என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சராசரியாக ஒரு லேப்-டாப் விலை, 20,000 ரூபாய் அளவில் இருக்கும் என எதிர்பார்த்து, முதற்கட்டமாக இந்த ஆண்டு, 2,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மேலும், 2,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
திறந்தவெளி 'டெண்டர்' கோரப்பட்ட பின், தெரியவரும் விலைக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு மாறும் வாய்ப்புள்ளது. மாணவர்கள் விரும்பி பயன்படுத்தும் அளவுக்கு, ஏன் எம்.எல்.ஏ.,க்களே பொறாமைப்படும் வகையில், தரமான லேப்-டாப், தேவையான அனைத்து உள்ளடக்கங்களுடன் வழங்க, தமிழக அரசு உறுதி பூண்டுள்ளது. எனவே, தரம் குறித்த கவலை தேவையில்லை.
தங்கமணி: அமைச்சர் தங்கம் தென்னரசு சாமர்த்தியமானவர்; திறமையானவர். அவர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் லேப்-டாப் வாங்க முதற் கட்டமாக, 2,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டிருந்தால், நாங்கள் புரிந்து கொண்டிருப்போம்.
இவ்வாறு விவாதம் நடந்தது.