சாலை பணிகளில் தென் மாவட்டங்களுக்கு முக்கியத்துவம்: அமைச்சர் வேலு
சாலை பணிகளில் தென் மாவட்டங்களுக்கு முக்கியத்துவம்: அமைச்சர் வேலு
ADDED : ஏப் 09, 2025 01:40 AM
சென்னை:''சாலை பணிகளில், தென்மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று, முதல்வர் கூறியுள்ளார். அதனால், மதுரையில் புறவழிச்சாலை அமைப்பது ஆய்வில் உள்ளது,'' என, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு கூறினார்.
சட்டசபையில் நடந்த கேள்வி நேர விவாதம்:
அ.தி.மு.க., - செல்லுார் ராஜு: மதுரையில் மக்கள் பெருக்கம் அதிகமாகி விட்டது; வாகனங்களும் அதிகமாகி விட்டன. காளவாசல் முதல் அரசரடி வரை போக்குவரத்து நெரிசல் கடுமையாக உள்ளது.
கோட்டயம், கொச்சி, எர்ணாகுளம், மூணாறு போக, இந்த ஒரே சாலை உள்ளது. மாற்று வழியாக, வைகை ஆற்றை ஒட்டி புறவழிச்சாலை அமைக்க வேண்டும். நிலம் எடுப்பதில் எந்த நெருக்கடியும் இருக்காது.
அமைச்சர் வேலு: சாலை பணிகளில், தென் மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று முதல்வர் கூறியுள்ளார்.
மதுரைக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதற்காக, கோரிப்பாளையம், அப்பல்லோ ஆகிய இரண்டு இடங்களில் மேம்பாலம் கட்டும் பணி நடக்கிறது. எனவே, புறவழிச்சாலை அமைப்பது ஆய்வில் உள்ளது.
அ.தி.மு.க., - ஓ.எஸ்.மணியன்: சென்னையில் இருந்து துாத்துக்குடி வரையான கிழக்கு கடற்கரை சாலை, வேதாரண்யம் வழியாக செல்ல வேண்டும்.
ஆனால், வேளாங்கண்ணியில் இருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி சென்று விட்டது. கிழக்கு கடற்கரை சாலைக்கு இணையாக வேதாரண்யம் - முத்துப்பேட்டை வரை இணைப்பு சாலை அமைத்து தர வேண்டும்.
அமைச்சர் வேலு: நியாயமான கோரிக்கை. சாலை அமைக்கும் போது நிலமும் கையகப்படுத்த வேண்டியுள்ளது. எனவே, நிதி நிலைக்கு ஏற்ப பணிக்கு முக்கியத்துவம் தரப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

